

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி வருகிறது. அதனால் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் வகையில் ரெயில்களில் முன்பதிவு தொடங்குகிறது. தற்போது 60 நாளுக்கு முன் முன்பதிவு செய்யக்கூடிய நிலை உள்ளது.
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வந்தே பாரத் ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பயணத்திற்காக நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.
ரெயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி, சில நிமிடங்களிலேயே அனைத்து பயணச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
நவம்பர் 6-ம் தேதி பயணம் செய்வதற்கு நாளையும், 7-ம் தேதி பயணத்திற்கு நாளை மறுதினமும் முன்பதிவு நடைபெற உள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு திரும்ப வரும் 10-ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுதவிர பெரும்பாலானவர்கள் ஏஜென்சிகள் மூலமாகவும் ஆன்லைன் வழியாகவும் முன்பதிவு செய்வதற்கு தயாராகி வருகின்றனர்.
ரெயில்களில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக குறித்த நேரத்திற்கு செல்ல முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.