

பெருநகர சென்னை மாநகராட்சியில் 09.11.2026 அன்று மதியம் 03.00 மணி நிலவரப்படி, இதுவரை சுமார் 406 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் இரண்டு வகைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு, உரிய முறையில் அறிவியல் பூர்வமாக அகற்றப்பட்டு வருகின்றன.
வெடிக்கப்பட்ட பட்டாசுகளிலிருந்து உருவாகும் காகிதங்கள், அட்டைப் பெட்டிகள் மற்றும் ரசாயனக் கலவைகள் இல்லாத இதர எரியக்கூடிய கழிவுகள் தனியாகச் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூரில் (KDG) அமைந்துள்ள 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட எரியூட்டும் நிலையத்திற்கு (Incinerator Facility) எடுத்துச் செல்லப்பட்டு, அறிவியல் பூர்வமாக அகற்றப்பட்டு வருகின்றன.
வெடிக்காத பட்டாசுகள் தனியாகச் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பான மற்றும் அறிவியல் பூர்வமான முறையில் சுத்திகரித்து அகற்றுவதற்காக கும்மிடிப்பூண்டியில் உள்ள பிரத்யேக செயலாக்க மையத்திற்கு எடுத்துச் எடுத்துச் செல்லப்பட்டு அறிவியல் பூர்வமாக அகற்றப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் சென்னை மாநகரம் முழுவதும் மொத்தம் சுமார் 600 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் உருவாகும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது. பட்டாசுக் கழிவுகளை முழுமையாகச் சேகரித்து, தரம் பிரித்து, உரிய முறையில் அறிவியல் பூர்வமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.