

குடும்பத்தில் உள்ள நபர்கள் இறந்தாலே, வெளிநாடுகளில் உள்ளவர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு அலட்சியம் காட்டும் நிலையில், தான் வளர்த்த செல்ல நாய்காக பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கொண்டு வந்து அஞ்சலி செலுத்திய வாலிபரின் செயல் காஞ்சிபுரம் பகுதி மக்களிடையே பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் பொன்னேரி கரை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி ராஜ் -ஞானசௌந்தரி தம்பதியினர். கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பழனி ராஜின் மகன் லோகேஷ் எம்எஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு லண்டனில் பணி செய்து கொண்டு மேல்படிப்பும் படித்து வருகிறார்.
இவர்களது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்ரக நாய் குட்டி ஒன்றை வீரூ என பெயரிட்டு செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளனர்.
கல்லூரி பேராசிரியர் பழனி ராஜ் குடும்பத்தினர் தங்களது மகன் லோகேஷை போலவே மற்றொரு மகனாக பாவித்து செல்ல நாயை அதிக பாசத்தோடு வளர்த்து வந்துள்ளனர்.
லோகேஷூம் செல்ல நாயும் அண்ணன்- தம்பி போலவே அதிக பாசத்தோடு இருந்துள்ளனர்.
லோகேஷ் மேல் படிப்பிற்காக லண்டன் சென்று விட்ட நிலையில் பழனி ராஜ் - ஞானசௌந்தரி தம்பதியினர் செல்ல நாய் வீரூவுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் செல்ல நாய் வீரூவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் பரிதாபமாக உயிர் இழந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் பழனி ராஜ் குடும்பத்தினர் உடனடியாக செல்ல நாய் உயிரிழந்து போனது குறித்து லண்டனில் உள்ள தங்களது மகன் லோகேஷுக்கு தகவல் தெரிவித்தனர்.
செல்ல நாய் காலமான செய்தி கேட்டு கதறி அழுத லோகேஷ் உடனடியாக தான் லண்டனில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து உடனடியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு விமான மூலம் சென்னை வந்து இன்று காலை காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்.
அதுவரை பேராசிரியர் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் உயிரிழந்ததைப் போல செல்ல நாயின் உடலை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இது குறித்து அறிந்த நண்பர்களும், உறவினர்களும் வந்து நாய்க்கு அஞ்சலி செலுத்தி விட்டு பேராசிரியர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சென்றனர்.
லண்டனில் இருந்து திரும்பி வந்த லோகேஷூம் தான் வளர்த்த செல்ல நாய் உயிரிழந்ததற்கு கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்திய சம்பவம் பார்த்தவர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
இதனைத் தொடர்ந்து மனிதர்களுக்கு செய்வது போலவே அனைத்து சடங்குகளும் செய்து செல்ல நாய் வீரூவின் உடலை பேராசிரியர் குடும்பத்தினர் நல்லடக்கம் செய்தனர்.
குடும்பத்தில் உள்ள நபர்கள் இறந்தாலே, வெளிநாடுகளில் உள்ளவர்கள் வந்து அஞ்சலி செலுத்துவதற்கு அலட்சியம் காட்டும் நிலையில், தான் வளர்த்த செல்ல நாய்காக பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கொண்டு வந்து அஞ்சலி செலுத்திய வாலிபரின் செயல் காஞ்சிபுரம் பகுதி மக்களிடையே பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.