

நிலத்தின் உரிமையாளர்களான நீலகண்டன், சுபாஷ் ஆகியோர் வெளியூரில் இருப்பதால் அவர்களை பிடித்தால்தான் உண்மை தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொடைக்கானலில் உள்ள மலைகிராமங்களில் நக்சலைட் ஆயுதப்பயிற்சி கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்தனர்.
சாலை வசதி இல்லாத கிராமங்களில் அங்குள்ள மக்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு தேவையான சில உதவிகளை செய்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கடந்த 2010ம் ஆண்டு ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட நக்சலைட்டுகளை பிடிக்க முயன்ற போது நவீன் பிரசாத் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்களுடன் தங்கியவர்கள் தப்பி ஓடிய நிலையில் வெவ்வேறு ஊர்களில் பதுங்கி இருந்து பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இது போன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் மலை கிராமங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மூலையாறு பகுதியில் உள்ள தனியார் நிலங்களில் வெடி குண்டுகள், கஞ்சா, மான் கொம்புகள் ஆகியவை அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். நீலகண்டன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 1 கிலோ கஞ்சா, 2 மான் கொம்புகளும், சுபாஷ் என்பவரது நிலத்தில் நாட்டு வெடிகுண்டுகளும், கஞ்சா பொட்டலங்களும் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதனை பதுக்கி வைத்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாட கொண்டு வந்தனரா? அல்லது மாவோயிஸ்ட் தொடர்பில் உள்ள நபர்கள் பதுக்கி வைத்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலத்தின் உரிமையாளர்களான நீலகண்டன், சுபாஷ் ஆகியோர் வெளியூரில் இருப்பதால் அவர்களை பிடித்தால்தான் உண்மை தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதில் நீலகண்டன் என்பவரது நிலத்தில் ஏற்கனவே மான்கொம்பு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிக்கியுள்ள பொருட்கள் நிலத்தின் உரிமையாளர்கள் வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் கும்பலுக்கு தொடர்பா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.