திருவொற்றியூரில் மண் சரிந்து ஒப்பந்த தொழிலாளி பலி

சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிநாதன் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொழிலாளி உடல் மீட்கப்பட்ட காட்சி.
தொழிலாளி உடல் மீட்கப்பட்ட காட்சி.
Published on

கழிவுநீர் அமைக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடைகள் தோண்டும் பணியின் பொழுது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்பு கருவிகள் ஏற்பாடு செய்யப்படாமல் தனியார் ஒப்பந்த தொழிலாளிகளை கொண்டு பணிகள் நடைபெற்றதுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் கிராமத் தெருவில் வினோத் குமார் என்பவரின் வீட்டில் 4-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீட்டுக்குள் தேங்கியதால் அவதி அடைந்த அவர்கள் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் அளித்தனர்.

மண் சரிந்தது

புகாரின் பேரில் சாத்துமா நகர் தெருவில் கழிவுநீர் அடைப்பை சரி செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மாநகராட்சி மூலம் புதியதாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 7 பேரைக் கொண்டு பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த பணியில் ஒப்பந்த ஊழியர்களான மனோகர், சேட்டு, சந்தியா, ராணி, செல்வம், பூமி நாதன் ஆகியோர் நேற்று இரவு 10 மணியளவில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய பொழுது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

தோண்டப்பட்ட பள்ளத்தில் மளமளவென மண் சரிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கிகொண்டனர். 2 பேர் உடனடியாக மேலே ஏறிய நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 32) என்பவர் மண் சரிவில் சிக்கிக்கொண்டார்.

தொழிலாளி பலி

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூமி நாதனை மீட்கும் முயற்சியில் சக ஊழியர்கள் ஈடுபட்டனர். அவரை மீட்க முடியாததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பூமி நாதனை பிணமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமிநாதன் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கழிவுநீர் அமைக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடைகள் தோண்டும் பணியின் பொழுது முறையான பாதுகாப்பு உபகரணங்கள் பாதுகாப்பு கருவிகள் ஏற்பாடு செய்யப்படாமல் தனியார் ஒப்பந்த தொழிலாளிகளை கொண்டு பணிகள் நடைபெற்றதுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com