சென்னை வடபழனி முருகன் கோவிலில் செப்டம்பர் 1 முதல் செல்போன்களுக்கு முழு தடை!

ரூ.5 கட்டணம் செலுத்தி பக்தர்கள் தங்களது செல்போனை ஒப்படைத்து டோக்கன் பெற்று செல்லலாம்.
Vadapalani Murugan Temple
Published on

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற வடபழனி அருள்மிகு ஆண்டவர் முருகன் திருக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் முழுமையாக தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் புதிய வழிகாட்டுதலின்படி, கோவிலின் புனிதத்தன்மையைக் காக்கவும், ஆன்மீக அமைதியை நிலைநாட்டவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

கோவிலின் கருவறை, பிரகாரங்கள் மற்றும் சன்னதிகளுக்குள் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான ரீல்ஸ் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் அல்லது திரைத்துறையினரை கோவில் வளாகத்திற்குள் வைத்து வீடியோ எடுக்கவோ அல்லது பதிவு செய்யவோ அனுமதி இல்லை.

தடையை மீறி ரகசியமாக செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் சென்றால், அவை பாதுகாப்பு ஊழியர்களால் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் போன்களை எங்கு ஒப்படைக்க வேண்டும்?

கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக தெற்கு கோபுரம் அருகில் ஏற்கனவே இருந்த காலணி பாதுகாப்பு இடம் தற்போது செல்போன் பாதுகாப்பு மையமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு ரூ.5 கட்டணம் செலுத்தி பக்தர்கள் தங்களது செல்போனை ஒப்படைத்து டோக்கன் பெற்று செல்லலாம். சாமி தரிசனம் முடித்து திரும்பும்போது மீண்டும் டோக்கனை காண்பித்து செல்போனை பெற்று செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கோவில் முன்புற பகுதியில் இடது மற்றும் வலது புறத்தில் 2 இடங்களில் காலணி வைக்கும் இடம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com