

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக்கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த முத்து கோணம்மாள் என்ற பெண் நிர்வாகி, தனது கணவருடன் கோவில் வளாகத்திற்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாகவும், அந்த காட்சிகளை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட தாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதை தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து கோவில் வளாகத்தில் வீடியோ எடுக்கக்கூடாது என்ற அறிவிப்பை மீறி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டதாக கூறப்படும் முத்து கோணம்மாள் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி, விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட விளாத்திகுளம் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, இதே கோவில் வளாகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த மற்றொரு பெண் நிர்வாகியான தேவி என்பவர் தனது பிறந்தநாளையொட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்ததாக சர்ச்சை எழுந்திருந்தது. அந்த சம்பவம் தொடர்பாகவும் கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.