கடந்த ஆட்சியில் கமிஷன் கொடுத்து ஏமாந்த ஒப்பந்ததாரர்கள் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

"இனிமேல் டெண்டர்களும் முற்றிலும் வெளிப்படையான முறையில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே ஒதுக்கப்படும்."
Complain with Proof of Past Commission Cheating: Minister Aadhav Arjuna
Published on

கடந்த ஆட்சிகளில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, வேலை வழங்காமல் ஏமாற்றியிருந்தால் அதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் தாராளமாகப் புகார் அளிக்கலாம் என்று தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாக அறிவித்துள்ளார்.

சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், முந்தைய ஆட்சிக் காலங்களில் டெண்டர் எடுப்பதற்கு முன்பே 'முதலமைச்சர் நிதி', 'அமைச்சர் நிதி' மற்றும் 'கட்சி நிதி' என்ற பெயர்களில் திட்ட மதிப்பில் சுமார் 25 சதவீதம் வரை கமிஷன் தொகையாகப் பெறப்பட்டு ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.

அவ்வாறு கமிஷன் கொடுத்து ஏமாந்தவர்கள், முறைகேடுகள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தால் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போதுள்ள அரசில் அமைச்சர்களோ, கட்சி நிர்வாகிகளோ அல்லது அதிகாரிகளோ ஒப்பந்ததாரர்களிடம் இருந்து எந்தவொரு லஞ்சமோ, கமிஷனோ கோர மாட்டார்கள் என்றும், அனைத்து டெண்டர்களும் முற்றிலும் வெளிப்படையான முறையில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், லஞ்சப் புகார்களைத் தெரிவிப்பதற்காக விரைவில் ஒரு பிரத்யேக கட்டணமில்லா உதவி எண் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசுத் தரப்பில் கமிஷன் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகைகள் விரைவாக விடுவிக்கப்படும் என்பதால், சாலைகள் மற்றும் அரசு கட்டடங்களின் கட்டுமானத் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யாமல் நிறுவனங்கள் தங்களது பணிகளை உலகத் தரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும், முறைகேடுகளில் ஈடுபடும் 'பெனாமி' நிறுவனங்கள் மீது சட்டப்படி டெண்டர் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com