அண்ணா சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது

போக்குவரத்து போலீசார் சென்னையில் சாகசம் நடத்தும் சாலைகளை கண்காணித்து நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
bike race
Published on: 
Summary

பைக் ரேசில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு லைசென்ஸ் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் எச்சரித்து உள்ளனர்.

பைக் ரேஸ்

சென்னையில் இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்களின் செயல்பாடு அத்துமீறி நடப்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நள்ளிரவு நேரத்தில் இளைஞர்கள் திடீரென சாலையில் பயங்கர இரைச்சலுடன் சாகசத்தில் ஈடுபடுவது போலீசாரையும் வியக்க வைக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காந்தி மண்டபம் அருகில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் குகன் என்ற ஒரு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மேம்பாலத்தில் சென்றபோது பைக் சாகச கும்பலின் அட்டகாசத்தால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து பலியானார்.

போக்குவரத்து போலீசார்

இதை அடுத்து போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்தனர். சாகசத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் 5 இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். அவர்களை திருவல்லிக்கேணி போலீசார் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினார். அதில் 4 பேர் கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் (23), விக்னேஷ் குமார் (20), அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(20), ஒரக்கடம் பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவன், வட பழனியைச் சேர்ந்த தர்ஷன்(20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் போக்குவரத்து போலீசார் சென்னையில் சாகசம் நடத்தும் சாலைகளை கண்காணித்து நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். வார இறுதி நாட்களில் சென்னையில் பைக் ரேஸ் செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்த சாகச கும்பலின் செயல்பாடு தற்போது அதிகரித்துள்ளது.

லைசென்ஸ் ரத்து

இதில் பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு லைசென்ஸ் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் எச்சரித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com