

சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் புறநகர் பகுதி மக்களையும் இணைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ்நிலையம் வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க திட்டமிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. சென்னை புறநகர் மக்களின் நீண்டகால கோரிக்கையான இந்தத் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை திட்டமிட்டு இருக்கும் வழித்தடத்தில் நீட்சியாக செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தப் பாதை டபுள் டக்கர் பாதையாக அமைவது சிறப்பாகும்.
அதன்படி கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு இடையே நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு இருக்கும் 6 வழி உயர்மட்ட மேம்பால சாலையுடன் இந்த மெட்ரோ பாதை அமைய உள்ளது.
இந்தத் திட்டத்திற்கான அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை, திட்டத்தின் தோராய நிதி மதிப்பு, ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், மண்ணின் தன்மை ஆகியவற்றை ஆய்வுசெய்து இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு விரிவாக்க மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் தடையற்ற சாலை போக்குவரத்துடன் மெட்ரோ ரெயில் இணைப்பு வழங்கப்படும். வெளிவட்ட சாலையுடன் இணைப்புக்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வு பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
இந்த மேம்பாட்டு சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும். பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வரை நீட்டிக்கப்பட்ட பாதை செல்லும்.
கிளாம்பாக்கம், சென்னை விமான நிலையம், தாம்பரம் ரெயில் நிலையம் முக்கிய போக்குவரத்து பகுதியை இணைக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும். 15.46 கி.மீ. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 13 உயர்மட்ட ரெயில் நிலையங்கள் இடம் பெறும். மேம்பாட்டு சாலைகள் உள்ளிட்ட இத்திட்டத்திற்கு ரூ.9,335 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது