முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கும் முதலமைச்சர் விஜய்

இழந்த அதிகாரம், பதவியை திரும்ப பெறவும், எதிரிகளை தனது பாதையில் இருந்து விலக்குவதற்கும் இந்த கோவிலில் சண்டி யாகம் நடத்துவது சிறப்பு வாய்ந்தது.
எம்ஜிஆர்- ஜெயலலிதா- விஜய்
Published on

முதலமைச்சர் விஜய் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே திருச்செந்தூர் சென்று முருகனை வழிப்பட்டார். அது முருகப்பெருமான் அசுரர்களை போரில் வென்ற திருத்தலம்.

அதே போல் தேர்தல் போரில் எதிரிகளை வெல்ல வேண்டும் என்ற வேண்டுதலுடன் விஜய்யும் சென்றார். நினைத்ததை போலவே வென்றார். ஆட்சி அமைத்தார்.

இப்போது யாரும் எதிர்பாராத வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட திட்டமிட்டுள்ளார். அவரது இந்த திடீர் ஆன்மிக பயணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் எல்லோரது பார்வையும் கொல்லூரை நோக்கி திரும்பி உள்ளது. கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் சிறப்புகளையும், முக்கியத்துவத்தையும் ஆர்வத்துடன் தேடுகிறார்கள்.

கொல்லூர் மூகாம்பிகை கோவில்

கொல்லூர் மூகாம்பிகை கோவில் வரலாறு:

புகழ்பெற்ற சக்தி ஸ்தலம். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கொடச்சத்திரி மலை அடிவாரத்தில் சவுபர்ணிகா நதிக்கரையில் இந்த கோவில் அமைந்து உள்ளது. இங்கு பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளும் ஒரே வடிவமாக காட்சி தருகிறார்கள். பத்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் மூகாம்பிகை, சங்கு சக்கரத்தை ஏந்திய படி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பழங்காலத்தில் கோலமகரிஷி அந்த இடத்தில் சிவனை நோக்கி தவம் செய்த போது சுயம்பு லிங்கத்தை தோற்றுவித்த சிவன் அதை வழிபடுமாறு கூறி இருக்கிறார். ஆனால் அந்த மகரிஷி வெறும் சிவனை மட்டும் வழிபடுவதா? தேவியும் இருக்க வேண்டும் என்று வேண்டிய போது அந்த சுயம்பு லிங்கத்தில் ஒரு சொர்ண ரேகை ஓடுவதையும், அதன் இடது பக்கத்தில் முப்பெரும் தேவிகளும், வலது பக்கத்தில் மும்மூர்த்திகளும் இருப்பதை பார்க்கும்படி கூறி இருக்கிறார். இதனால் மகிழ்ந்த மகரிஷியும் அந்த சுயம்பு லிங்கத்தை வழிப்பட்டு வந்துள்ளார்.

கால சக்கரம் சுழன்றது. ஆதி சங்கரர் கால் நடையாக தேச யாத்திரை சென்ற போது அந்த பகுதியில் அமர்ந்து தியானம் செய்து இருக்கிறார். அப்போது தேவி அவருக்கு காட்சி கொடுத்துள்ளார். அதை பார்த்து மகிழ்ந்த ஆதிசங்கரர் ‘அம்மா உங்களின் இந்த எழில்மிகுந்த உருவத்தை கேரளத்தில் உள்ள காலடியில் நிறுவ விரும்புகிறேன்’ என்று கூறி இருக்கிறார். ஆனால் அன்னைக்கோ அந்த இடத்தில்தான் அமருவதற்கு விருப்பம். இருந்தாலும் பக்தனின் மனம் வேதனைப்படக் கூடாது என்பதற்காக அவரது வேண்டுகோளை ஏற்று ‘நீ என் உருவத்தை தாங்கியபடி இந்த மலையில் இருந்து புறப்பட்டு செல். காலடி செல்லும் வரையில் திரும்பி பார்க்கக் கூடாது. அப்படி திரும்பி பார்க்க நேர்ந்தால் அந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படியே அன்னையின் திருஉருவத்தோடு ஆதிசங்கரரும் மலையில் இருந்து இறங்கி இருக்கிறார். மலை அடிவாரத்தில் சென்ற போது அன்னை கொலுசு சத்தத்தை கேட்டதும் திரும்பி பார்த்து இருக்கிறார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் அன்னையின் கட்டளைப்படியே அந்த இடத்திலேயே அன்னையை பிரதிஷ்டை செய்துள்ளார். அங்கு சக்திவாய்ந்த ஸ்ரீசக்கர பீடத்தையும் அதன் மீது பஞ்சலோகத்திலான தேவியின் விக்கிரகத்தையும் பிரதிஷ்டை இருக்கிறார்.

எம்.ஜி.ஆர். வழிபாடு:

தேவியின் அருள் நிறைந்த இந்த திருத்தலத்திற்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் செல்கிறார்கள். இந்த கோவிலின் பெருமையையும், சக்தியையும் உணர்ந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அரசியல் ரீதியாக கடுமையான சவால்களை சந்தித்த போது எதிரிகளை சமாளிக்கும் ஆற்றல் பெறுவதற்காக கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளார். அவருடைய வேண்டுதல் நிறைவேறி அரசியலில் சாதித்தார். இதனால் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதை வழக்கமாக்கினார்.

தனது நன்றி கடனாக அம்பாளுக்கு தங்க வாள் ஒன்றையும் காணிக்கையாக செலுத்தினார். ஒரு கிலோ எடையில் 2.5 அடி நீளம் கொண்ட அந்த வாள் இன்றும் கோவில் கருவறையில் உள்ளது. அதற்கும் தனி பூஜை செய்யப்படுகிறது.

எம்.ஜி.ஆர். வழி வந்த ஜெயலலிதாவும் இந்த கோவில் மீது மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்தார். இழந்த அதிகாரம், பதவியை திரும்ப பெறவும், எதிரிகளை தனது பாதையில் இருந்து விலக்குவதற்கும் இந்த கோவிலில் சண்டி யாகம் நடத்துவது சிறப்பு வாய்ந்தது. இதனால் அரசியல் ரீதியாக தான் சந்தித்த நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காகவும், மீண்டும் பதவிக்கு வருவதற்காகவும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று ஜெயலலிதா சண்டி யாகம் நடத்தினார். அப்போது எம்.ஜி.ஆர். வழங்கிய தங்க வாளை சிறிது நேரம் வாங்கி கையில் வைத்தபடி பிரார்த்தனையும் மேற்கொண்டார். அதன் பிறகு அவர் மீண்டும் 2011 முதல் தொடர்ந்து 2 முறை ஆட்சியை கைப்பற்றினார்.

கல்வி, செல்வம், வீரம் அனைத்தையும் அருளும் இந்த திருத்தலத்திற்கு பிரபலங்கள் பலரும் அடிக்கடி சென்று தரிசித்து வருகிறார்கள். சூர்யா-ஜோதிகா, மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆர். போன்றவர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். இந்தி பட உலக சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ‘கூலி’ படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார். அப்போது இந்த கோவிலின் மகத்துவத்தை அறிந்து வேண்டுதல் வைத்துள்ளார்கள். பின்னர் அமிதாப்பச்சன் உடல்நலம் சீரானதும் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்தி இருக்கிறார்கள்.

படைப்பாளிகளுக்கு ஆற்றல் கொடுக்கும் தலம். பதவிகளின் உச்சத்தை கொடுக்கும் தலம் என்பதால் இங்கு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் பக்திப்பூர்வமாக சென்று வழிபடுகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com