திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் மனு தாக்கல்!

பொது நலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.
By-Election
Published on
Summary

5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், முதலமைச்சர் விஜய் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். ராஜினாமா செய்தபோது வழக்கு இல்லை, தடையை நீக்கி தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.

இடைத்தேர்தலுக்கு தடை

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு, 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது என பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

ராஜினாமா செல்லும்

இந்த வழக்கில் எதிர் மனுதாரர், முதலமைச்சர் விஜய் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ந்தேதி தான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் மே 10-ந்தேதியே தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற நாளில் எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை.

காலியான தொகுதிக்கு தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. இடைத் தேர்தல் அறிவிக்க தடை கோரி வழக்கு தாக்கல் செய்தவர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரல்ல. தொகுதியின் வாக்காளருமல்ல.

வழக்கு உள்நோக்கம்

திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தில், அடிப்படை உரிமையில்லாமல் , இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொகுதியின் லட்சக்கணக்கான மக்கள், எம்.எல்.ஏ. இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது நலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல.

இடைத்தேர்தல் அவசியம்

5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்காக, இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கை தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது. காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும்.

தடை நீக்குக

இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கப்பட்ட 5 தொகுதிகளிலும் பல முனைப் போட்டி நடந்து உள்ளது. இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடவில்லை என்பதால், பொதுநலன் கருதி, இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com