

சென்னையில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த அதி கனமழை காரணமாக 280 இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் அதனை சரி செய்வதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேங்கிய மழை நீைர வடிய வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக ராட்சத ஜெனரேட்டர்கள் மற்றும் டிராக்டர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
இதனால் இன்று காலைக்குள் 273 இடங்களில் மழைநீர் முற்றிலுமாக அகற்றப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்தார். 9 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது. இரவில் கொட்டிய மழை காரணமாக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் முகாம்களுக்கு பொதுமக்கள் யாரும் தஞ்சம் அடையவில்லை. மழை வெள்ளத்தை உடனடியாக அகற்றியதே இதற்கு காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருப்பினும் இன்று காலையில் 13,500 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உஷார் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.