

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான மிக முக்கிய நிர்வாக நடவடிக்கையாக, பட்டினப்பாக்கத்தில் உள்ள நிலத்தின் வகைப்பாட்டை மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ (CMDA) அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை பல்வேறு பிரிவுகளின் கீழ் இருந்த இந்த நிலங்கள், தற்போது 'வணிக பயன்பாட்டு மண்டலமாக' மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிய தலைமைச் செயலக திட்டத்தின் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்குவதற்கு இந்த நில வகைப்பாடு மாற்றம் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ரூ. 1,200 கோடி திட்ட மதிப்பில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகம், மொத்தம் 26.36 ஏக்கர் நிலப்பரப்பில், 20 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் 15 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடமாக அமையவுள்ளது.
இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 26.36 ஏக்கர் நிலப்பரப்பும் அரசுத் துறைகளுக்குச் சொந்தமானவை என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி மிகவும் சுலபமாக முடிந்துள்ளது.இதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான 22.89 ஏக்கர் நிலமும், வருவாய்த் துறைக்குச் சொந்தமான 1.73 ஏக்கர் நிலமும், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கர் நிலமும் உள்ளடங்கியுள்ளன.
15 மாடிகளைக் கொண்ட அதிநவீன பிரமாண்ட வளாகத்தில் பல்வேறு வசதிகள் இடம்பெறவுள்ளன. அதில், அதிநவீன சட்டப்பேரவை அரங்கம், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான தனித்தனி அறைகள், துறை வாரியான அரசு நிர்வாக அலுவலகங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான அறைகள், செய்தியாளர்கள்/பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக அறை, நவீன உணவகம், அவசர மருத்துவமனை மற்றும் தீயணைப்புத்துறை அலுவலகம் மற்றும் ஆயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்துவதற்கான பிரமாண்ட வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் இடம்பெற உள்ளன.
தற்போது அரசு செயல்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் கடுமையான இடநெருக்கடி நிலவி வருகிறது. மேலும், பழைய கட்டிடம் என்பதால் அவசர காலங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், பெரும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளதால் புதிய தலைமை செயலகம் அமைப்பது அவசியமாகியுள்ளது.
அரசுத் துறைகளின் நிலங்களே அங்கு அதிகமாக இருப்பதால் நிலம் கையகப்படுத்துவது எளிதாக இருந்தது. மேலும், இப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளன. மாநகர பேருந்து வசதிகள் அதிகளவில் உள்ளன. அருகில் புறநகர் மின்சார ரெயில் வசதியும் உண்டு. விரைவில் திறக்கப்படவுள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையம், இந்த புதிய வளாகத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் இணைப்பாக அமையும்.
இத்திட்டத்திற்குப் பட்டினப்பாக்கம் பகுதி மீனவ கிராம மக்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.
புதிய தலைமைச் செயலக வருகையால் இப்பகுதியில் கடுமையான இடநெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கடற்கரையோரம் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் அகற்றப்படும் அபாயம் இருப்பதாகப் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.