வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர் தகவல்
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 1.7.2023-ல் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

10-ம் வகுப்பு (தோல்வி), 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, 30.6.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

என்ஜினீயரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.6.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதிக்குள்ளாக அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com