

கேபிள் டி.வி., டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதில், கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் இப்போது வசூலிக்கப்படுவதில் இருந்து 4 முதல் 6 மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. இதனால் 11 கோடி டி.வி.க்களின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது.
அதிகப்படியான லைசென்சு கட்டணம் விதிக்கப்பட உள்ளதால், லட்சக்கணக்கானவர்களின் வேலையும் பறிபோக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த தகவல் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இணையதளங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை. மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 'தொலைதொடர்பு விதிகள் 2026' தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொடர்புடையவர்கள் இந்த வரைவு அறிக்கை தொடர்பாக வருகிற 27-ந்தேதி வரையிலும் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அந்த வரைவு அறிக்கையில் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான எந்த பிரிவுகளும் இல்லை.
தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளுக்காக வழங்கப்பட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை ஒருங்கிணைப்பதை இந்த விதிகள் நோக்கமாக கொண்டுள்ளன. மேலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு துறையின் செயல்பாடுகளை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் அதே வேளையில் தற்போதுள்ள நடைமுறையை மேலும் சுலபமாக்குவதற்கும், இணக்கமாக செயல்படுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.