மீண்டும் நோ சொன்ன மத்திய அரசு: கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு மீண்டும் கலைந்தது!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மே மாதத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை அனுப்பியிருந்தது.
Coimbatore-Madurai Metro
Published on

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமான 'கோயம்புத்தூர்' மற்றும் ஆன்மீக பண்பாட்டு மையமான 'மதுரை' ஆகிய இரு முக்கிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இரண்டாவது முறையாக நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.

மக்கள்தொகை அளவுகோல் குறைவு:

தேசிய மெட்ரோ ரெயில் கொள்கை (2017)-இன் படி, ஒரு நகரில் மெட்ரோ திட்டம் தொடங்க குறைந்தபட்சம் '20 லட்சம் மக்கள்தொகை' இருக்க வேண்டும். 2011 கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சமும், மதுரையில் 15 லட்சமும் மட்டுமே மக்கள்தொகை உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயண நேரச் சேமிப்பு போதாமை:

இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ அமைப்பதால் எதிர்பார்த்த அளவு பயண நேரம் குறையாது என்றும், அதிக அளவிலான பயணிகள் பயன்பாடு இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாற்றுப் போக்குவரத்து பரிந்துரை:

மெட்ரோ போன்ற பிரம்மாண்ட செலவினத் திட்டங்களுக்குப் பதிலாக, அதிவேகப் பேருந்து போக்குவரத்துச் சேவையை மற்றும் நகர்ப்புற பேருந்து எண்ணிக்கையை அதிகரிப்பதே சிறந்தது என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

கோவை மெட்ரோ:

கோவை மெட்ரோ திட்டம் 39 கிலோமீட்டர் நீளத்தில், அவிநாசி சாலை வழியாக கருமத்தம்பட்டி வரை மற்றும் உக்கடம்-சத்தியமங்கலம் சாலை வழியாக வலியம்பாளையம் பிரிவு வரை செல்லும். இதில் 32 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமைக்க ரூ.10,740 கோடி மதிப்பிடப்பட்டது.

மதுரை மெட்ரோ:

அதேபோல், மதுரை மெட்ரோ திட்டம் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31.9 கிலோமீட்டர் நீளத்தில், 26 நிலையங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் 23 உயர்மட்ட பாதையிலும், 3 நிலத்தடி பாதையிலும் அமைக்க ரூ.11,360 என கணிக்கப்பட்டது.

முந்தைய நிராகரிப்பு:

கடந்த ஆண்டு (நவம்பர்) முதன்முறையாகத் திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கூடுதல் தரவுகள், மிதக்கும் மக்கள்தொகை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி மே மாதத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் கோரிக்கை அனுப்பியிருந்தது.

அரசியல் முரண்பாடுகள்:

ஆக்ரா, போபால், பாட்னா போன்ற நகரங்களில் குறைவான மக்கள்தொகை இருந்தபோதிலும் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் ஆளுங்கட்சியும் ஏனைய அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com