

தமிழ்நாட்டின் தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஒரு ஜாமின் மனு மீதான விசாரணையின் போது, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 'பள்ளர் தெரு' என்று குறிப்பிடப்பட்டிருந்ததை கண்ட நீதிபதி ரமேஷ், இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
தெருக்கள் மற்றும் சாலைகளுக்குப் பெயரிடும்போது சாதியக் குறிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று 1978-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அரசாணைகளும், நீதிமன்ற வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், ‘பள்ளர் தெரு’ என்பது புழக்கத்தில் இருப்பது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி,
“ஒரு தெருவுக்கோ அல்லது சாலைக்கோ ஒரு சாதியின் பெயரைச் சூட்டுவதால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அந்த இடங்களில் வசிப்பவர்கள் தங்கள் சாதியின் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள்.
மேலும் அந்தப் பெயர்கள் அவர்களின் ரேஷன் அட்டைகள், ஆதார் அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள் போன்ற அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் இடம்பெறுகின்றன.” என தெரிவித்தார்.
மேலும், “அந்தத் திசையில்தான் உயர் நீதிமன்ற நீதிபதி பாரத சக்கரவர்த்தி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்களை நீக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.” என்று கூறினார்.
தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயர் மாற்றத்தைக் குறிப்பிட்டு பேசிய நீதிபதி, தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இருந்து அனைத்து சாதிப் பெயர்களும் முற்றிலுமாக நீக்கப்படாவிட்டால் இந்த முயற்சி முழுமையடையாது என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஜாமின் மனுவை பரிசீலித்த பின்னர், தெருக்கள் மற்றும் சாலைகளில் இருந்து சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த நீதிபதி ரமேஷ், உரிய உத்தரவுகளுக்காக தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியிடம் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றப் பதிவகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார் .
தாமாக முன்வந்து தொடரப்படும் இந்த வழக்கை எந்த அமர்வின் முன் வைக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்தவுடன் , சாலைப் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்கள் நூறு சதவீதம் நீக்கப்படுவதை உறுதிசெய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்படலாம்.