பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கு - ஆக.25க்குள் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கையும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்கு - ஆக.25க்குள் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு!
Published on

பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்த வழக்கில் ஆக.25ம் தேதிக்குள் பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய் பிரமாணப் பத்திரத்தில் சில தகவல்களை மறைத்ததாகவும், இதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணையின்போது, இதுதொடர்பாக பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி. மசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகி, விஜய் தனக்கு எதிரான தேர்தல் வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி மனுக்களைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் அந்த மனுக்களைத் தாக்கல் செய்ய நான்கு வார கால அவகாசம் கோரி, இந்த வழக்கு விசாரணையும் ஒத்திவைக்கக் கோரினர்.

ஆனால் நான்குவார கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அடுத்த விசாரணைக்கு மனுக்களை தாக்கல் செய்யக்கோரி, வழக்கு விசாரணையை ஆக.25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தொடர்ந்து வில்லிவாக்கம் தொகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கையும் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அந்த வழக்கும் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com