

சென்னையில் இன்று காலை போக்குவரத்து சிக்னலில் தாறுமாறாக ஓடிய லாரி மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து காரணமாக 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை பேசின் பாலத்தில் இருந்து மிண்ட் நோக்கி செல்லும் சாலையில் உள்ள மூலத்கொத்தளம் சந்திப்பில் இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. கார்-மோட்டார்சைக்கிள்கள், மாநகர பஸ்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவை அந்த சாலையில் அணி வகுத்து சென்று கொண்டிருந்தன.
காலை நேரம் என்பதால் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்பவர்களும் தங்களது மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தனர். இந்த மூலத்கொத்தளம் சந்திப்பில்தான் பழமையான கருவாடு மண்டியும் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்தும் கருவாட்டு மண்டியில் கருவாடுகளை வாங்கி செல்வதற்காக பலரும் வருகை தருவார்கள். இந்த வழியாக சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்லலாம். இதனால் எப்போதும் மூலத்கொத்தளம் சந்திப்பு மிகவும் பரபரப்பாகவே காட்சியளிக்கும்.
இந்த நிலையில்தான் இன்று காலை 9.30 மணி அளவில் வியாசர்பாடி பகுதியில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மூலத்கொத்தளம் நோக்கி லாரி ஒன்று சென்றது.
அந்த லாரியில் அதிகளவில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு இருந்ததால் மிதமான வேகத்திலேயே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி தாறுமாறாக ஓடியது.
இதனால் உஷாரான டிரைவர் பிரேக் அழுத்தி லாரியை நிறுத்த முயன்றார். ஆனால் லாரி பிரேக் பிடிக்காமல் மூலத்கொத்தளம் சந்திப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதும், அந்த வழியாக சென்றவர்கள் மீதும் மோதியது.
பரபரப்பான நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரேக் பிடிக்காமல் சென்ற லாரி மூலத்கொத்தளம் சந்திப்பை கடந்ததும் மிண்ட் நோக்கி சென்றது. அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் துரித வேகத்தில் செயல்பட்டு லாரி டயர்களுக்கு அடியில் கட்டைகளை போட்டு வேகத்தை தடுத்தனர். இதன் பின்னரே லாரி கட்டுக்குள் வந்தது.
இருப்பினும் இந்த கோர விபத்தில் லாரி சக்கரம் அடியில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் பெயர் முரளிதரன் (வயது56) என்று தெரிய வந்தது. சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு ஐகோர்ட்டுக்கு சென்று கொண்டு இருந்த போது தான் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவருக்கு ஸ்ரீஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டது.
லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இன்னொருவரின் பெயர் கவுதமன் (60) என்பதும் தெரிய வந்தது. ஆவடி இந்திரா நகர் பாலவேடு காலனி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்த விபத்தில் சென்னை ஐகோர்ட்டில் பணிபுரிந்து வந்த ராஜேஸ்வரி (45) என்ற பெண் காயம் அடைந்தார். இவர் முரளிதரனுடன் ஒரே மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்ற போது விபத்தில் சிக்கி உள்ளார். அவருக்கு இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
வியாசர்பாடி கென்னடி நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தாறுமாறாக லாரியை ஓட்டி சென்றது சென்னை கோயம்பேடு பாரதியார் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரிய வந்தது. கோர விபத்தை ஏற்படுத்தியதும் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார்கள்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் அவரை மீட்டனர். இந்த விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று காலை 9.30 மணியளவில் விபத்து நடைபெற்ற நிலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றன. மூலத்கொத்தளம் சந்திப்பு சாலைகளில் ரத்தம் வழிந்தோடி காணப்பட்டது. அதனை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.
இந்த விபத்து காரணமாக இன்று காலையில் மூலக்கொத்தளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.