

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு வருகிற 1-ந் தேதி முதல் தீவிரப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 14.11.2022 முதல் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ஐகோர்ட்டு உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையானது. தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100 விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
எனவே பக்தர்கள் கோவிலுக்கு வரும்போது தங்களது செல்போன்களை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது தங்களது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்து விட்டு சாமி தரிசனம் செய்ய வருகை தர வேண்டும்.
மேலும், பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் கைபேசி பாதுகாப்பு வைப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.
பரிசோதனையின்போது பக்தர்களிடம் செல்போன்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுதவிர பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி, பொது அறிவிக்கை அமைப்பு, ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
எனவே, ஐகோர்ட்டு உத்தரவின்படி கோவிலுக்குள் செல்போன் இன்றி தரிசனம் செய்வதை முழுமையாக நடைமுறைப்படுத்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.