

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில், நேற்று முதல் செல்போன் கொண்டு செல்வதற்கு தீவிர தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் தங்களின் மொபைல் போன்களை பிரத்யேக கவுண்டர்களில் பாதுகாப்பாக ஒப்படைக்க ஒரு போனுக்கு ரூ. 5 வீதம் டோக்கன் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டோக்கன் கட்டணமுறையால் பக்தர்கள் நீண்ட வரிசையில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், இதற்கு பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
இந்நிலையில் கோயில்களுக்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது என்ற விதிமுறையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்.,
“கோயில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோயில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோயிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழ்நாடு அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும்.
கோயில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.” எனக் குறிப்பிட்டுள்ளார்.