

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையால் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. ரெயில்கள், பஸ்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், பயணிகள் விமானங்களை அதிகமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஆயுத பூஜை விழா வருகிற 19-ந்தேதி கொண்டாடப்படுகிறது. முன்னதாக 17, 18-ந்தேதி சனி, ஞாயிறு விடுமுறை தினம் மற்றும் 20-ந் தேதி விஜயதசமி என தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றன.
இதனால், சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதன்காரணமாக ரெயில்கள், பஸ்களில் அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. ஆம்னி பஸ்களில் பலமடங்கு கட்டணங்கள் அதிகரித்து உள்ளது.
இதையடுத்து ஏராளமான பயணிகள் விமானங்களில் பயணம் செய்ய அதிக அளவில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, கோவை, மதுரை நகரங்களுக்கு நாளைய(16-ந்தேதி) விமான கட்டணமும் அதிகரித்து உள்ளது.
சென்னை - மதுரை விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் சுமார் ரூ.3500-ல் இருந்து ரூ.5,500-ஆக இருக்கும். ஆனால் நாளைய கட்டணம் ரூ.12 ஆயிரத்து 213 வரையும், 17-ந்தேதி ரூ.15 ஆயிரம் வரையும் உயர்ந்து உள்ளது.
இதேபோல் சென்னை-தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.4000 முதல் 5,500-ஆக இருந்த பயணக் கட்டணம் தற்போது நாளை ரூ.14 ஆயிரத்து 975 ஆக எகிறி உள்ளது.
சென்னை - கோவைக்கு சாதாரண நாட்களில், சுமார் ரூ.3500 முதல் ரூ.4500-ஆக இருந்த கட்டணம் நாளை ரூ.13 ஆயிரம் வரையும், 17-ந்தேதி ரூ. 11 ஆயிரத்து 500 வரையும் அதிகரித்து உள்ளது. சென்னை- திருச்சிக்கு நாளை ரூ.11 ஆயிரத்து 215 வரையும், சேலத்திற்கு ரூ.12 ஆயிரத்து 237 வரையும் அதிரடியாக உயர்ந்து இருக்கிறது.
சென்னை-மும்பை விமானம் கட்டணம் நாளை ரூ.30 ஆயிரம் வரையும், ஐதராபாத்திற்கு ரூ.27 ஆயிரம் வரையும் பல மடங்க அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.