ஓய்வூதியம் பெற நல வாரியத்தில் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை

சென்னையில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Auto driver suicide
Published on: 

சென்னை வியாசர்பாடி சர்மாநகர் எஸ்.ஏ. காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 61). ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 20 வருடமாக ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.

இவருக்கு யாகூப் அலி, சுலைமான் என 2 மகன்கன் உள்ளனர். அவர்களும் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதனால், இப்ராகிம் தனியாக வசித்து வந்துள்ளார். அவ்வப்போது அவரது மகன்கள் வந்து சாப்பாடு கொடுத்து அவரை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தூக்கில் தொங்கினார்

கடந்த 28-ந்தேதி முகமது இப்ராகிம் வீட்டிற்கு அவரது மகன் சாப்பாடு கொடுக்க சென்றார். அப்போது நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது முகமது இப்ராகிம் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி போலீசாருக்கும், 108 ஆம்பு லன்சுக்கும் தகவல் கொடுத்தார்.

கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவ ஊழியர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது.

பிரேத பரிசோதனை

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடித்து மகன்கள் அவரது உடலை அடக்கம் செய்தனர்.

அதிர்ச்சி வீடியோ

இந்த நிலையில், முகமது இப்ராகிம் மகன்கள் தனது தந்தையின் செல்போனை நேற்று எடுத்து பார்த்தனர். அப்போது அதில் இருந்த ஒரு வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முகமது இப்ராகிம் தற்கொலை செய்வதற்கு முன்பு அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் ஓட்டும் ஆட்டோவை என்னால் பராமரிக்க முடியவில்லை. அதற்கு இன்சூரன்ஸ், எப்.சி., தேய்மான செலவு, வாங்கிய கடன் எல்லாம் அதிகமாக உள்ளது. இத்தனைக்கும் நான் தனி ஆளாகத்தான் இருக்கிறேன். வண்டியின் எப்.சி.க்கு ரூ.35 ஆயிரம் கடனாக வாங்கினேன். அந்த கடனை என்னால் அடைக்க முடியவில்லை. மேற்கொண்டு கடன் தான் ஆகிறது. ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டிய காலம் எல்லாம் போய் விட்டது. கார்ப்பரேட் நிறுவனத்தினர் கார், ஆட்டோ என 2 ஆயிரம், 3 ஆயிரம் வண்டிகளை ஓட்டுகிறார்கள். பற்றாக்குறைக்கு பைக் டாக்சி வேறு.

மீட்டர் கட்டணம்

என்னைப்போல் ஏழை தொழிலாளி பாதிக்கப்படக் கூடாது. இதை சக டிரைவர்கள் பார்க்கும்போது நான் உயிரோடு இருப்பேனா இல்லையா என்பது தெரியாது. அனேகமாக இருக்க மாட்டேன், நான் பாதித்தது போல வேறு யாருமே பாதிக்கக்கூடாது.

முதலமைச்சர் விஜய், என் போன்றவர்கள் பாதிக்காமல் இருக்க உடனடியாக மீட்டர் கட்டணத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும். நீங்கள் செயலியை எப்போது வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால் முதலில் மீட்டர் கட்டணத்தை உயர்த்தி கொடுங்கள். அதை கொடுப்பதில் உங்களுக்கு என்ன செலவு வரப்போகிறது.

மாற்றம் வேண்டும்

என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் இருப்பார்கள். நான் வெளியில் சொல்லிவிட்டேன். வெளியில் சொல்ல முடியாமல் நிறைய பேர் இருப்பார்கள். தனியாக இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால், குடும்பமாக இருப்பவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை பாருங்கள்.

அனைத்து ஆட்டோ சங்கங்களும் இந்த பதிவை போக்குவரத்து ஆணையருக்கும், முதலமைச்சருக்கும் தெரியப்படுத்த வேண்டும். மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்தோம். எங்கள் ஆட்டோக்காரர்கள் வாழ்வில் மாற்றமே வர வில்லை. என் போன்று இனி யாரும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

ஊழல் நடக்கிறது

ஊழலை ஒழித்து விட்டேன் என்கிறீர்கள். நல வாரிய அலுவலகத்தில் ஊழல் நடக்கத்தான் செய்கிறது. நான் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் ஆவணங்கள் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் நிராகரித்தது எனது பைலில் தான் இருக்கிறது.

சங்கத்தினர் எல்லோரும் சேர்ந்து நடவடிக்கை எடுங்கள். கட்டணம் எவ்வளவு? என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை பலகை போட்டு தெளிவாக வையுங்கள். விண்ணப்பதை நிராகரிப்பதற்கு நலவாரியத்தில் வேலை செய்கிறார்கள் என்றால், எதற்காக நல வாரியம்? ரொம்ப மனவேதனையில் இருக்கிறேன். ஜெய்ஹிந்த். அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும், சங்கத்துக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

இவ்வாறு அவர் வீடியோவில் பேசி உள்ளார்.

ஆடியோ பதிவு

மேலும் ஆட்டோ டிரைவர் முகமது இப்ராகிம், நலவாரியத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான தீர்வு ஏற்பட உதவி கோரி ஆட்டோ டிரைவர்கள் சங்க வாட்ஸ்அப் குழுவில் ஆடியோ ஒன்றையும் ஏற்கனவே பதிவிட்டு இருந்தார். அந்த ஆடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-

நான் நல வாரியத்தில் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து அலைந்து கொண்டிருக்கிறேன். நான் மனம் வெறுத்து போய் இந்த பதிவை போடுகிறேன். யாராவது எனக்கு நல்ல ஐடியா கொடுங்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி விட்டு நல வாரிய அலுவலகத்துக்கு செல்லவா அல்லது முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு செல்லவா? எங்கு சென்றால் தீர்வு கிடைக்கும்?

அலைய விடுகிறார்கள்

ஒவ்வொரு முறையும் என்னை அலையவிடுகிறார்கள். பணம் வாரி இறைத்துக்கொண்டு இருக்கிறேன். போகும் இடம் எல்லாம் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. என்னுடைய ஸ்மார்ட் கார்டு மீது சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்கள். என்னிடம் ஒரு ஸ்மார்ட் கார்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு என்ன சந்தேகம் வந்தது என்று தெரியவில்லை. எங்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று விவரம் தெரிந்த வர்கள் யாராவது எனக்கு சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் வேதனையுடன் பேசி உள்ளார்.

முற்றுகை

இந்த வீடியோ மற்றும் ஆடியோவை அவரது மகன்கள், சக ஆட்டோ டிரைவர்களுக்கு அனுப்பி வைத்தனர். அதனை பார்த்த ஆட்டோ டிரைவர்கள் நேற்று மாலை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், ‘ஒரு ஆட்டோ டிரைவரின் உயிர் அநியாயமாக போய்விட்டது. இனி யாவது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். விரைவில் ஆட்டோ டிரைவர் சங்கங்கள் ஒன்று கூடி முடிவு செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம்’ என்றனர்.

மன உளைச்சல்

இதுகுறித்து முகமது இப்ராகிம் மகன் சுலைமான் கூறியதாவது:-

நான், எனது தந்தை, அண்ணன் ஆகிய 3 பேருமே ஆட்டோ ஓட்டி வருகிறோம். நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோம். கொரோனா காலகட்டத்தின் போது எனக்கும், எனது அண்ணனுக்கும் மாதம் 1,000 ரூபாய் வீதம் 3 மாதங்கள் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை நலவாரியத்தில் இருந்து வந்தது. ஆனால் எனது தந்தைக்கு உதவித்தொகை வரவில்லை.

அவருக்கு பென்ஷன் பெறுவதற்காக நல வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தோம். அதற்காக நல வாரியத்தில் உள்ளவர்கள் லஞ்சம் கேட்டனர். மேலும் ஆவணங்கள் கேட்டு அலைக்கழித்தனர். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com