அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு

சுராஜித் போர்வா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
Ammonia gas leak
Published on

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த 'புனித பீட்டர் பால்' என்கிற கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உள்பட 74 பேர் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்று முன்தினம் வரை 10 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், நேற்று சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரீட்டா ஜுஜிங்கா (வயது 28), பிங்கி ஜுஜிங்கா (21) மற்றும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமித்ரா ஜிங்கா (22) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

21 பேர் 'டிஸ்சார்ஜ்'

இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே மஞ்சங்காரணை தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து 13 பேரும், செங்குன்றம் அடுத்த நல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து 8 பேரும் என மொத்தம் 21 வடமாநில பெண் தொழிலாளர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள். இவர்கள் கன்னிகைப்பேரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் மஞ்சங்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 16 தொழிலாளர்களை அசாம் மாநில பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். சுராஜித் போர்வா தலைமையிலான 5 பேர் கொண்ட குழு ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com