

தவெக தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, விவசாயிகளின் முழு பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தினார்.
தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார்.
அப்போது அவர், "நிதி பற்றாக்குறைகளை மட்டுமே காரணம் காட்டி, தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை நிறுத்தக்கூடாது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு தான், தவெக அரசு தேர்தல் அறிக்கையை அறிவித்திருக்கும். அதில் வாக்குகள் வரவேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு, தவெக அரசால் செயல்படுத்த முடியாத பல வாக்குறுதிகளை கொடுத்து, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
நிதிநிலை அறிக்கையில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான எந்தவித அறிவிப்பும் இல்லை.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம், குடிமராமத்து திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம் போன்ற பல்வேறு பாசன திட்டங்கள் அதிமுக ஆட்சியின் காலத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டன.
அதிமுக ஆட்சி காலம் விவசாயிகளின் பொற்காலமாக போற்றப்பட்டது.
முழு கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்த சிறு குறு விவசாயிகள் இன்று கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே தேர்தல் அறிவிப்பில் கூறியபடி, முழுக்கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை, இந்த அரசு ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் தமிழகத்திலே அறிவித்துள்ளது" என்று கூறினார்.
அமைச்சர் நிர்மல்குமார் பதில்
இந்த கருத்துக்கு பதில் அளித்த தமிழக அரசின் எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “பல திட்டங்கள் கடந்த 60 முதல் 70 ஆண்டுகளாக இருந்து வருவதுதான்... ஆனால் பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டன.
தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, புது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தவெக ஆட்சியில் திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை வரவேற்று, அதனை மேம்படுத்தி வருகிறோம்.
அம்மா உணவகம் சரியாக செயல்படாமல் இருந்தது. அதன் பெயர் எதையும் மாற்றாமல், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.