

தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை பா.ஜ.க.வில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க போவதாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கட்சியில் இருந்து விலகுவதாகவும், தெரிவித்து அதற்கான விலகல் கடிதத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பா.ஜ.க. தலைமை சம்மதிக்காமல் அண்ணாமலையை சமரசம் செய்ததாக தெரிகிறது.
ஆனாலும் அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கு ஏற்றார் போல் அவரது ஆதரவாளர்களும் போஸ்டர்கள் ஒட்டி அண்ணாமலைக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் நகர்வாக இருந்தாலும் மதுரையில் செய்யப்படும் பணிகள் பேசப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சில நாட்களாக அண்ணாமலையை முன்னிலைப்படுத்தி அவரது ஆதரவாளர்கள் மதுரை முழுவதும் வித்தியாசமான சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி 2 ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலை சந்தித்து முதலமைச்சராகி விட்டார். சினிமாவில் முன்னனி நடிகராக திகழும் அஜித்குமார் அரசியலில் ஈடுபட போவதில்லை என்றும், ரசிகர்கள் அவரவர் குடும்பத்தை கவனித்து கொள்ளுமாறும் அறிவுறுத்தி வருகிறார். ஆனாலும் அவரது ரசிகர்களின் அரசியல் ஆசை குறையவில்லை.
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது முதலமைச்சர் விஜய், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நடிகர் அஜித்குமார் படத்தை அவரது ரசிகர்கள் கொடுத்தது பேசும் பொருளாக இருந்தது.
மேலும் மதுரையில் அஜித் ரசிகர்கள் அடிக்கடி வித்தியாசமான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். தற்போது அண்ணாமலையின் புதிய அரசியல் வியூகத்திற்கு இரைபோடும் வகையில் அண்ணாமலை படத்துடன் ரஜினி-அஜித்குமார் ஆகியோரது படங்களுடன் வித்தியாசமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில் ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோரது ‘பஞ்ச் டயலாக்குகளும்’ இடம் பெற்றுள்ளன.
‘உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு, வெற்றி வேல் வீர வேல்’ என்ற வாசகத்துடன் மனித கடவுள் அஜித் பக்தர்கள் என சுவரொட்டிகள் இடம்பெற்றுள்ளது. சில ரஜினி ரசிகர்களும் தனியாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இந்த புது முயற்சி அரசியலில் அண்ணாமலை களம் காணும் பட்சத்தில் இளைஞர்களையும், சினிமா ரசிகர்களையும் அவர் பக்கம் இழுக்க யுக்தியாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் அழகர் சாமி கூறுகையில், மதுரையில் ரஜினி படத்துடன் அண்ணாமலையை சேர்த்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கும், ரஜினி மன்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தலைவர் ரஜினி அவரவர் பிடித்த அரசியல் கட்சிகளில் சேர்ந்து பணியாற்றலாம் என்று ஏற்கனவே கூறியுள்ளார். எனவே அண்ணாமலையின் அனுதாபிகளான ரஜினி ரசிகர்கள் சிலர் இது போன்ற சுவரொட்டிகளை ஒட்டி இருக்கலாம். தலைவர் ரஜினி உத்தரவிற்கேற்ப மதுரை மாவட்ட ரஜினி மன்றம் செயல்படும் என்று தெரிவித்தார்.
இதே போல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முக்கிய இடங்களில் அருப்புக்கோட்டை ரஜினி தலைமை ரசிகர் மன்றம் சார்பாக அண்ணாமலையை வாழ்த்தி ‘சூப்பர் ஸ்டார் கண்டெடுத்த வருங்கால முதல்வரே வாழ்த்துகிறோம்’ என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
இந்த போஸ்டர்கள் பொதுமக்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.