

சென்னையில் கடந்த ஆண்டு மின்சார பஸ் சேவை தொடங்கப்பட்டது. 625 மின்சார பஸ்கள் தற்போது இயக்கப்படுகின்றன.
சென்னை பெருநகரம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால் பொது போக்குவரத்து தேவை அதிகரித்து உள்ளது. அதன் அடிப்படையில் மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் மற்றும் மாநகர பஸ் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறுகிய சாலை, வளைந்து செல்லும் பாதைகள், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பஸ் சேவை அளிக்க முடியாத இடங்களுக்கு மின்சார மினி பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
570 மின்சார மினி பஸ்கள் இயக்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் 300 மினி பஸ்கள் இதுவரையில் பஸ் வசதி இல்லாத பகுதிகளை இணைக்கும் வகையில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
270 மினி பஸ்கள் மெட்ரோ ரெயில் பயணிகளை பிற பகுதிகளுக்கு அழைத்துச் செல்லக்கூடிய வகையில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களை மையமாக வைத்து இந்த பஸ் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த மினி மின்சார பஸ்கள் அனைத்தும் ஏசி வசதி கொண்டவை. தாழ்தள பேருந்துகளாக கட்டமைக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின்சார மினி பஸ்கள் அடுத்த கட்டமாக இயக்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் விரிவாக்க பகுதிகளை பொதுபோக்குவரத்து மூலம் இணைத்து பெரிய பஸ்கள் போக முடியாத பகுதிகளுக்கு மின்சார பஸ் இயக்கப்படும்.
மக்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதியின் கடைசி எல்லையில் இருந்து இந்த சேவை அளிக்கப்படும். பஸ் நிலையங்கள், மின்சார ரெயில் நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த சேவை அமையும்.
மினி பஸ்சில் டிரைவர் மட்டுமே இருப்பார், கண்டக்டர் கிடையாது. பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை சென்னை செயலி, பிற அட்டைகள், ஜி.பே., மற்றும் பணமாக கொடுத்தும் பயணம் செய்யலாம். 13 இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் 10 பேர் நின்று பயணம் செய்ய முடியும்.
15 நிமிடத்திற்கு ஒரு சேவை என்ற அடிப்படையில் மினி மின்சார பஸ்களை இயக்குவதற்கு திட்டமிடப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது பயன்பாட்டிற்கு வரும். பஸ்சுக்காக மக்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க தொடர்ந்து இந்த சேவை அளிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.