

திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் உத்தரவின்பேரில் இன்று முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடில்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர்.
இந்த கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது குடில்களில் தங்கும் பக்தர்கள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக நேற்று ஒரு நாள் மட்டும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களுடன் சொரிமுத்து அய்யனார் கோவில் நோக்கி நேற்று படையெடுத்தனர்.
தொடர்ந்து இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை அகஸ்தியர்பட்டியில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
திருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் உத்தரவின்பேரில் இன்று முதல் 14-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நெல்லை, ஆலங்குளம், சுரண்டை, அம்பை, தென்காசி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசிக்காக 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக், போதை பொருட்கள், மதுபானங்கள், வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பொருட்கள் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளதால் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் பஸ்களை நிறுத்தி பக்தர்களின் பொருட்களை சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.