

'ஜெம்' வீரமணியிடம், 14 மணி நேரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 'ஜெம்' வீரமணி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி, பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரால் சீரழிக்கப்பட்ட 10 சிறுமிகள், இதுவரை அவர்மீது சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ரகசிய விசாரணை மூலம் அவர்களது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை 6 போக்சோ வழக்குகள் உள்பட 7 வழக்குகள் வீரமணி மீது போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு வழக்கில் சிறுமியை தற்கொலை செய்ய தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில், 4 வழக்குகளில் வீரமணி கைதாகி உள்ளார். அதில் ஒரு வழக்கு மதுரையில் பதிவு செய்யப்பட்ட வழக்காகும். குண்டர் சட்டத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறப்பு புலனாய்வு படை போலீசார், 3 பிரிவுகளாக பிரிந்து வீரமணி மீதான வழக்குகளை விசாரித்து வருகிறார்கள்.
ஒரு பிரிவினர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கிறார்கள். வழக்கை முறையாக விசாரிக்காமல், வீரமணி மீதான வழக்கை கோர்ட்டில் முடித்து வைத்தது குறித்து 2-வது பிரிவு விசாரிக்கிறது. 3-வது பிரிவு வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ரூ.120 கோடி அளவுக்கு பணம் கைமாறியதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
வீரமணி கடந்த ஆகஸ்டு 29-ந்தேதியன்று கைது செய்யப்பட்டார். 84 வயது நிரம்பிய அவரை கைது செய்து, போலீசார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துவந்தனர். கைது செய்யப்பட்ட விவரம், முதலில் அவருக்கு தெரியாது. விசாரணைக்காகவே அழைத்து செல்கிறோம் என்று அவரிடம் போலீசார் கூறியுள்ளனர். கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தவுடன், அவர் கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தேம்பி, தேம்பி அழுதபடி காரை விட்டு இறங்க மறுத்தார். என்னிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கினார்கள். இப்போது என்னை கைது செய்வது ஏன்? என்று அவர் கதறி அழுதார். போலீஸ் விசாரணைக்கும் அவர் ஒத்துழைக்க மறுத்தார். இதனால் கைது செய்தபோது, அவரிடம் சரியாக போலீசாரால் விசாரணை நடத்தமுடியவில்லை.
எனவே 3 நாட்கள் போலீஸ் காவலில் ஏற்கனவே புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரித்தார்கள். அப்போது வழக்கு விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்று விசாரணை நடத்தப்பட்டது. அவர் சொன்ன தகவலின்பேரில்தான், அவர் ரகசியமாக எழுதி வைத்திருந்த டைரியையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் யார், யாருக்கு எவ்வளவு பணம்கொடுத்தார் என்பது பற்றிய விவரங்கள் இருந்தன.
அதன் அடிப்படையில்தான் தற்போது போலீஸ் விசாரணை நடக்கிறது. இந்நிலையில், வீரமணியால் சீரழிக்கப்பட்ட சிறுமி ஒருவர், தற்கொலை செய்துகொண்டது குறித்து வீரமணியிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. இதற்காக மீண்டும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து, சிறையில் வைத்து வீரமணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றுடன் வீரமணியிடம் சிறை காவல் விசாரணை முடிந்தது.
வீரமணியிடம் கடந்த 2 நாட்களாக. மொத்தம் 14 மணி நேரம் சிறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். உதவி கமிஷனர் காயத்ரி தலைமையிலான போலீசார், 200 கேள்விகளை அவரிடம் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறுமிகளை சீரழித்தது எப்படி? வழக்கை முடித்துவைக்க யார். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? குறிப்பிட்ட ஒரு நகைக்கடையில் தங்கக்கட்டிகள் உங்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அந்த தங்கக்கட்டிகள் யாருக்கு கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரித்ததாக கூறப்படுகிறது.
200-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த சாட்சிகள் சொன்ன தகவல்கள் குறித்தும் வீரமணியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் வீரமணி பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியான வண்ணம் உள்ளது. அதில் உள்ள தகவல்களையும் வீரமணியிடம் காட்டி, அதில் உள்ள உண் மைத்தன்மை குறித்தும் போலீசார் விசாரித்ததாக தெரிகிறது. வீரமணியிடம் போலீஸ் காவல் விசாரணை முடிந்துவிட்டதா ? என்று சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம்' என்று தெரிவித்தனர். 'ஐகோர்ட்டில் இதுதொடர்பான விசாரணை உள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக தேவை இல்லாத கருத்துகளை வெளியிட வேண்டாம்' என்று சிறப்பு புலனாய்வு படை போலீ சார் கேட்டுக்கொண்டனர்.