அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விதிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

2007-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட அனுமதியற்ற கட்டிடங்கள் வரன்முறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விதிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வேகமான நகர் வளர்ச்சி மற்றும் மக்கள் பெருக்கம் காரணமாக நகர்ப்பகுதிகளில் குறைந்த அளவே நிலங்கள் இருப்பதால் அதற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், நிலங்களின் விலை அதிகரித்துள்ளதுடன் அனுமதியற்ற கட்டிடங்களும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அமலாக்க நடவடிக்கைகளை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

2007-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அன்றோ அல்லது அதற்கு முன்போ கட்டப்பட்டுள்ள விதிகள் மீறிய அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு விலக்கு அளிக்க கோரப்பட்டது. சென்னை பெருநகர பகுதிக்கான வளர்ச்சி விதிகள் மற்றும் நகர் ஊரமைப்புத் துறை கட்டுப்பாட்டு பகுதிகளுக்கான வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகளிலிருந்து, சில நியாயமான வரம்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு குந்தகம் விளைவிக்காமல், நடைமுறை சாத்தியக்கூறுகளுக்கு இணங்க, விலக்களிக்க ஏதுவாக தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம், 1971-ல் பிரிவு 113-சி இணைத்து உள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்காக, உரிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை பரிந்துரைக்க நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் அரசு ஒரு குழுவை நியமித்தது. நீதிபதி ராஜேஸ்வரன் குழுவின் பரிந்துரைகள் கடந்த 13-ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டு, ஒப்புதலும் பெறப்பட்டது.

இவ்விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் முக்கிய கூறுகள் வருமாறு:-

* கட்டிடம் 2007-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அல்லது அதற்கு முன்னர் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

* விமான போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகள், கடலோர பகுதி விதிமுறைகள், விமான படைத்தள விதிமுறைகள், ராணுவ விதிமுறைகள், மலையிடப்பகுதி பாதுகாப்பு விதிமுறைகள், தமிழ்நாடு நியூக்ளியர் நிறுவுதல் விதிமுறைகள் போன்ற விதி முறைகளுக்கு இணங்கி இருக்க வேண்டும்.

* பொது இடங்கள், சாலைகள், தெருக்கள், அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள், நீர்நிலைப்பகுதிகள், முழுமைத் திட்டம் அல்லது விரிவான வளர்ச்சி திட்டம் அல்லது புதுநகர் வளர்ச்சித் திட்டம் அல்லது ஒப்புதல் பெற்ற மனைப்பிரிவுகளில் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு திடலுக்காக ஒதுக்கிய திறந்தவெளிப்பகுதி போன்ற இடங்களில், கட்டிய கட்டிடங்கள் இத்திட்டத்தின் கீழ் வரன்முறை செய்யப்படமாட்டாது.

* சென்னை பெருநகர் பகுதியில் நிலத்தடி நீர்பிடிப்பு பகுதி மற்றும் செங்குன்றம் நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள அனுமதியற்ற கட்டிடங்கள் வரன்முறைப்படுத்த இயலாது.

* சாலை அகல தேவை, பக்க இடைவெளித்தேவை, தளப்பரப்பு குறியீடு தேவை, வாகன நிறுத்துமிடம் மற்றும் திறந்த வெளிப்பகுதி தேவை போன்ற திட்ட காரணிகள் குறித்து விதிவிலக்குகள், தீப்பாதுகாப்பு மற்றும் கட்டிட உறுதித்தன்மைக்கு உட்பட்டு, நீதிபதி ராஜேஸ்வரன் குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

* இத்திட்டத்தின் கீழ் தங்களுடைய கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விரும்புவோர் வழக்கமான வளர்ச்சி கட்டணம், கூடுதலாக உள்ள தளப்பரப்பு குறியீடுகளுக்கு ஊக்க தளப்பரப்பு குறியீட்டு கட்டணம், வாகன நிறுத்துமிடம் குறைபாடு கட்டணம், திறந்தவெளிப்பகுதி விதிமீறல்களுக்கான கட்டணங்கள் செலுத்த வேண்டும். வரன்முறைப்படுத்துவதற்கான அபராத தொகையினை உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் கட்டணத்தின் குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் அவர் அடைந்த தளப்பரப்பு குறியீட்டுக்கு ஏற்றவாறு செலுத்த வேண்டும்.

* 2007-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ அனுமதியற்ற, விதிமீறல்களுடன் கட்டப்பட்ட அனைத்து தனியார் கட்டிடங்களின் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட அபிவிருத்தியாளர்கள் தங்கள் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த, இதற்கான கட்டணங்களை சுயமதிப்பீடு செய்து, இவ்விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் அக்கட்டணங்களுடன் கட்டாயமாக இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

* இத்திட்டத்தின்கீழ் வரன்முறைப்படுத்த தகுதியற்ற கட்டிடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், வடிகால் இணைப்புகள் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் வகையிலும், இவ்வகை சொத்துக்களை பிற நபருக்கு விற்க தடைவிதிக்கும் வகையிலும், உரிய துறைகளான குடிநீர் வாரியம், மின்சார வாரியம், பதிவுத்துறை ஆகிய துறைகள் தத்தம் சட்டம் மற்றும் விதிகளில் உரியதிருத்தம் செய்யப்படும்.

நீதிபதி ராஜேஸ்வரன் குழு பரிந்துரையின் அடிப்படையில், அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, உரிய விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அரசு அறிவிப்பு செய்துள்ளது. வளர்ச்சி விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை செய்ய விரும்புவோர் தங்கள் கட்டிடத்திலுள்ள விதிமீறல்களை, இவ்விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள்படி, சுயமதிப்பீடு செய்து, 6 மாத காலத்திற்குள் இணைய வழி மூலம் விண்ணப்பித்தல் வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com