

போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக், கரும்பு விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில், பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான மானிய உச்சவரம்பு உயர்வு, கச்சத்தீவு மீட்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆளுநர் உரை முடிந்ததும் இன்றைய கூட்டம் முடிந்தது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
அப்போது, ஆளுநர் உரை மீது முதலமைச்சர் நன்றி தெரிவித்து பேசும் தினத்தில், எதிர்க்கட்சி தலைவரும் பேச அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. பின்னர் தொடர்ந்து நடந்த ஆலோசனையில் கூட்டத் தொடரை 12-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சபாநாயகர் தனபால் கூறியதாவது:
சட்டமன்ற கூட்டத் தொடரை 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை (9-ம் தேதி) முதல் வியாழன் (11-ம் தேதி) வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து, 12-ம் தேதி முதலமைச்சர் உரை நிகழ்த்துவார்.