அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது அரசியல் சூழ்ச்சி: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்

அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது அரசியல் சூழ்ச்சி என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது அரசியல் சூழ்ச்சி: தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்
Published on

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-

மாணவி அனிதாவை இழந்தது மிகப்பெரிய துயரம். வேதனையானது. எந்தவகையிலும் ஈடுசெய்ய முடியாதது.

வறுமையுடன் போராடி சாதித்த அந்த குழந்தையை நீட் தேர்வு போராட்டத்துக்காக டெல்லிவரை அழைத்து சென்று இருக்கிறார்கள்.

இந்த பிரச்சினை நடந்து கொண்டிருந்தபோது ஒரு வேளை நீட் தேர்வில் மருத்துவம் கிடைக்காமல் போனால் விவசாயம் படிப்பேன் என்று சொன்னார். துணிச்சம் தைரியமும் நிறைந்த அந்த குழந்தை திடீரென்று மனம் மாறி தற்கொலை செய்து கொண்டது எப்படி? அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? இதன் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

நீட் தேர்வு வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் வரிந்து கட்டுவது ஏன்? நீட் தேர்வை சந்திக்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களை தயார்படுத்துங்கள்.

சர்வதேச அளவில் மருத்துவ துறை சவாலான துறையாக உருவெடுத்துள்ளது. அதை எதிர் கொள்ளும் தகுதியை நமது பிள்ளைகளும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மாணவர்களின் வாழ்க்கையை பகடைகாயாக்கி தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள துடிக்கும் சுயநல அரசியல் வாதிகளை தமிழக மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

சமூக நீதியின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்கிறீர்களே கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 39. ஆனால் இந்த ஆண்டு 109 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

இதர வகுப்பினர்கள் பிரிவில் 555 பேர் சேர்ந்து இருந்தாலும் அதிலும் குறிப்பிட்ட சதவீதம் பிற்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் சேர்ந்துள்ளார்கள். உயர் வகுப்பு பிரிவில் 99 பேர்தான் சேர்ந்துள்ளார்கள். சமூக நீதி எங்கே மறுக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் பணம் இருந்தால் தான் மருத்துவ கல்லூரிகளில் சேரமுடியும் என்ற நிலையை மாற்றி சாதாரண குடும்பத்து மாணவர்களுக்கும் முயன்றால்

மருத்துவம் படிக்க முடியும் என்ற நம்பிக்கையை மோடி ஏற்படுத்தி இருக்கிறார்.

முன்பு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என்றால் மருத்துவ படிப்புக்கான கனவே தகர்ந்து விடுமே. இப்போது 3 முறை நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே.

நாடு முழுவதும் கூடுதலாக 60 ஆயிரம் மருத்துவக் கல்வி இடங்கள், 12 மருத்துவக் கல்லூரிகள் கட்ட உத்தரவு, ரத்தக்குழாய் அடைப்பை சரி செய்யும் ‘ஸ்டென்ட்’ விலையை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

எல்லோரையும் வாழ வைக்க பாதுகாக்கத்தான் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் தங்கள் அரசியல் பிழைப்புக்காக மோடி எதுவும் செய்ய வில்லை. பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்ற நச்சு கருத்துக்களை நயவஞ்சகமாக விதைத்து வரும் இந்த அரசியல் கட்சிகளின் முகமூடி கிழிக்கப்படும். உரிக்கப்படும்.

அனிதாவின் மரணத்தை வைத்து சூது அரசியல் நடத்துகிறார்கள். மக்கள் நலத்திட்டங்களை செய்து வரும் மோடியை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. துடைப் பத்தாலும், செருப்பாலும் அடித்து அவமானப்படுத்தும் கீழ்த்தரமான அரசியல் வாதிகளை இனியும் பொறுக்க மாட்டோம்.

நல்லது செய்துவிட்டு அவமானப்பட வேண்டிய அவசியமில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

மக்களை ஏமாற்றி சாதி அரசியல் செய்வது யார் என்பதை மக்களிடம் எடுத்து சொல்வோம். சம தர்மம் என்று சொல்லி அதர்ம அரசியல் நடத்துபவர்களுக்கு எதிராக பா.ஜனதாவின் தர்மயுத்தம் தொடங்கி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com