

சென்னை:
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுக்குள் நடக்கும் சண்டை கேலிக்கூத்தானது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்பம் என்று இப்போது சொல்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து பட்டப்பகலில் ஊடக வெளிச்சத்தில் காலில் விழுந்தவர்தானே ஓ.பன்னீர் செல்வம்.
7 கோடி தமிழர்களின் தலை எழுத்தை நிர்ணயிக்க வேண்டிய ஒரு முதல்- அமைச்சர் அன்று தனது தலை எழுத்துக்காக தலைவணங்கி சசிகலாவின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்றார். அன்று மட்டும் சசிகலா சரியாக செயல்பட்டாரா?
தான் முதல்வர் ஆக வேண்டும் என்று சசிகலா செயல்பட்டதால் கோபம் வந்து வெளியேறினார்.
அதன் பிறகும் அந்த குடும்பத்தை சேர்ந்த டி.டி.வி.தினகரனை ஆர்.கே.நகர் வேட்பாளராக தேர்வு செய்து அவருக்கு எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட அத்தனை பேரும் வேலை செய்யவில்லையா?
ஜெயலலிதா மறைந்த பிறகும் பிப்ரவரி மாதம் வரை சசிகலா குடும்பத்தைத் தானே நம்பி இருந்தார்கள்.
இப்போது சசிகலா முகத்தை காட்டினால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்பவில்லை என்கிறார்கள்.
3 அணியினரையும் ஒன்றாகவே பாவிக்க முடியும். மூவரும் சேர்ந்து தமிழக அரசியலை பாழ்படுத்தி விட்டார்கள்.
ஒரு எம்.எல்.ஏ. கூட மக்கள் ஆதரவை பெற்று திரும்பி வரப் போவதில்லை. எனவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 4 ஆண்டில் தமிழகத்தை எவ்வளவு சூறையாட முடியுமோ அவ்வளவையும் செய்வார்கள். அதற்காக நடக்கும் போட்டிதான் இது. சொந்த நலன் பாதித்து விட கூடாது என்பதற்காக கூக்குரல் எழுப்புகிறார்கள்.
தர்மயுத்தம் நடத்துவதாக சொல்லி தர்மயுத்தத்தின் அர்த்தத்தையே கொச்சைப் படுத்தி விட்டார்கள். முதல்- அமைச்சராக இருந்தவர் முதல்-அமைச்சருக்கு கீழ் ஆனாலும் பரவாயில்லை என்று பதவிக்காக தாழ்ந்து போய் நிற்கிறார்.
தன் நிலையில் இருந்து தாளாமை வேண்டும். தாழ்வு ஏற்பட்டால் உயிர் வாழாமை வேண்டும் என்பார் திருவள்ளுவர். தரம் தாழ்ந்து போன இவர்களுக்கு என்ன சுயமரியாதை இருக்க முடியும்? பெற்ற அதிகாரம் மூலம் பெருங்கொள்ளையில் ஈடுபடத்தான் போராடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.