புரோ கபடி 2017: 6-வது தோல்வியை சந்தித்தது தமிழ் தலைவாஸ் அணி - குஜராத், பெங்கால் அணிகள் வெற்றி
புரோ கபடி லீக் 2017 போட்டிகள் பல கட்டங்களாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 6-வது கட்ட போட்டிகள் மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் 1-ம் தேதி தொடங்கியது.
மூன்றாம் நாளான இன்று (3-ம் தேதி) நடைபெற்ற 'பீ' பிரிவு லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரிட்சை செய்தன. தமிழ் தலைவாஸ் அணி இரண்டாவது வெற்றியைப் பெறும் முனைப்புடன் களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்கால் அணி ஆதிக்கம் செலுத்தியது. 20 நிமிட முடிவில் பெங்கால் அணி 18-9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தமிழ் தலைவாஸ் அணி இரண்டாம் பாதியில் 9 புள்ளிகளை விட்டுக்கொடுத்து 14 புள்ளிகள் எடுத்தது. இருப்பினும் மொத்த புள்ளிகள் அடிப்படையில் பெங்கால் அணி 29-25 என்ர புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தாண்டு 9 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 6-வது தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற பெங்கால் அணி 'பீ' பிரிவில் 40 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலும், தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ் அணி, தொடர்ந்து ஆறாவது இடத்திலும் நீடிக்கின்றன.
முன்னதாக நடைபெற்ற 'ஏ' பிரிவு லீக் போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில், ஜெய்ப்பூர் அணி 31-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இது குஜராத் அணியின் இரண்டாவது தோல்வியாகும். குஜராத் அணியின் சச்சின் அதிகபட்சமாக 7 தொடுபுள்ளிகள் எடுத்தார்.
இப்போட்டியில், வென்ற ஜெய்ப்பூர் அணி 'ஏ' பிரிவில் நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. குஜராத் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

