மேற்கு வங்காளத்தில் 79 பாஜக தலைவர்களுக்கு விஐபி பாதுகாப்பு

பா.ஜனதா தலைவர்கள் ஜிதேந்தர் திவாரி, கிரேன்மே சட்டபாத்யாயா, யாஷ் தாஸ் குப்தா, சரவந்தி சட்டர்ஜி ஆகியோருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக
பாஜக
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

இந்த சட்டசபை தேர்தலில் இங்கு எப்படியாவது ஆட்சியை பிடிப்பதற்கு பாரதிய ஜனதா தீவிர முயற்சி செய்து வருகிறது. இதனால் அந்த கட்சியில் இருந்து ஏராளமான தலைவர்களை பாரதிய ஜனதா தன்பக்கம் இழுத்தது.

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் அந்த தலைவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதுகிறார்கள். மேலும் மத்திய உளவுத்துறை நிறுவனங்களும் அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக அறிக்கை அளித்துள்ளனர்.

இதனால் அந்த தலைவர்களுக்கு மத்திய அரசே பாதுகாப்பு வழங்க முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து பா.ஜனதாவை சேர்ந்த 79 தலைவர்களுக்கு மத்திய அரசு வி.ஐ.பி. அந்தஸ்து பாதுகாப்பு வழங்கியுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். இதன்படி பா.ஜனதா தலைவர்கள் ஜிதேந்தர் திவாரி, கிரேன்மே சட்டபாத்யாயா, யாஷ் தாஸ் குப்தா, சரவந்தி சட்டர்ஜி ஆகியோருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜனதாவை சேர்ந்துள்ள நடிகர் பாயல்சர்க்கார் ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த பிரபல நடிகர் மிதுன்சக்ரவர்த்திக்கு ‘ஒய்பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி இருக்கிறார்கள். இதனால் அவருக்கு மத்திய தொழில் படையின் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்படும்.

அதைப்போல பாரதிய ஜனதாவில் சேர்ந்த கிரிக்கெட் அசோக் திண்டா, திரிணாமுல் காங்கிரசில் இருந்து வந்த தலைவர்கள் பன்சாரி மைத்தி, திபாலி பிஸ்வாஸ், பைசாலி டால்மியா உள்ளிட்டோருக்கும் மத்திய போலீஸ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com