பட்டா வழங்க ரூ.18 ஆயிரம் லஞ்சம்- கிராம நிர்வாக அதிகாரி கைது

பட்டா வழங்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பனில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் பாலசுப்பிரமணியன்(வயது 42). இவரை ஆனைவடபாதி கிராமத்தை சேர்ந்த விவசாயி மனோஜ் பாபு சந்தித்து தனது தந்தை சாரங்கன் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா கோரி கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்து இருந்தார்.

கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் பட்டா வழங்க மனோஜ்பாபுவிடம் முதலில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி மனோஜ்பாபு ரூ. 3 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு பட்டா வழங்காமல் மேலும் ரூ.18 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் மனோஜ்பாபு புகார் அளித்தார். இதனையடுத்து நேற்று காலை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் மனோஜ்பாபுவிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியனிடம் கொடுக்குமாறு கூறினர்.

அதன்படி மனோஜ்பாபு கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலசுப்பிரமணியனை கையும், களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com