வாணியம்பாடி தொழிலதிபர் கடத்தல்- 4 பேர் கைது

வாணியம்பாடியில் தொழிலதிபரை காரில் கடத்திச்சென்ற வழக்கில் தோல் வியாபாரி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பைரோஸ் அகமது (வயது45). இவர், கச்சேரி சாலையில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள தோல் வியாபாரிகளிடம் பைரோஸ் அகமது தனது தொழிற்சாலைக்கு தேவையான தோல்களை கொள்முதல் செய்து வந்துள்ளார்.

அந்த வகையில், கடந்த ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த தோல் வியாபாரியான இஸ்மாயில் (62) என்பவரிடம் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தோலை பைரோஸ்அகமது வாங்கியுள்ளார். அதற்கான தொகையை திண்டுக்கல் வியாபாரியிடம் வழங்காமல் பைரோஸ்அகமது காலம் தாழ்த்தி வந்துள்ளார். தோலுக்கான பணத்தை கேட்டு இஸ்மாயில் பலமுறை வாணியம்பாடிக்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இஸ்மாயில் தனது மகன் இப்ராம்சா (35), அவரது நண்பர்களான யாசின் (34), அப்துல்பாசித்(25) ஆகியோருடன் காரில் வாணியம்பாடிக்கு வந்தார்.

பைரோஸ்அகமது வீட்டுக்கு சென்றபோது அங்கு அவரது மனைவி ராபியாபஸ்ரி (40) மட்டுமே வீட்டில் இருந்தார். இதையடுத்து, பைரோஸ் அகமதுவை தேடி வாணியம்பாடி காதர்பேட்டை உழவர் சந்தை வழியாக இஸ்மாயில் தனது காரில் வந்த போது, எதிரே வந்த பைரோஸ் அகமதுவை வலுக்கட்டாயமாக தனது காரில் திண்டுக்கல்லுக்கு கடத்தி சென்றார். இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனே, பைரோஸ்அகமது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் ராபியாபஸ்ரி தனது கணவர் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான காவல்துறையினர் பைரோஸ் அகமது செல்போன் சிக்னல் சென்ற வழியாக சென்று திண்டுக்கல் செல்லும் சாலையில் இஸ்மாயில் காரை வழிமடக்கி பைரோஸ் அகமதுவை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து, இஸ்மாயில், இப்ராம்சா உட்பட4 பேர் மீது வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com