

புதுடெல்லி:
கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு அண்மையில் விரிவுபடுத்தியது. அதன்படி, 18 முதல் 45 வயது வரை உடையவார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஆனால், கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்தவில்லை. சில மாநிலங்கள் தாமதமாக அந்தத் திட்டத்தை செயல்படுத்தின. மாநிலங்கள் தொடர் கோரிக்கைகளை முன்வைத்தபோதும், போதிய எண்ணிக்கையில் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, தடுப்பூசிகளை நேரடி கொள்முதல் செய்யும் முயற்சியில் மாநிலங்கள் இறங்கின. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி கொள்முதலுக்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டன.
பஞ்சாப் மாநில அரசு அமெரிக்காவின் மாடர்னா, பைசர், ஜான்சன் அன்டு ஜான்சன் மற்றும் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை நேரடி கொள்முதல் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விநியோகிக்க முடியாது என்று மாடர்னா நிறுவனம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
‘தடுப்பூசி விநியோகம் தொடார்பான மாநிலங்களுடனோ அல்லது தனி நபர்களுடனோ எந்தவித உடன்படிக்கையும் வைத்துக் கொள்ள இயலாது. இது தொடர்பாக, இந்திய அரசிடம் மட்டுமே ஒப்பந்தம் வைத்துக்கொள்ள முடியும்’ என்று அந்த நிறுவனம் பதில் அளித்துள்ளது. இதன் காரணமாக, மற்ற மாநிலங்களும் தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.