சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் துணை நிற்போம்- டி.டி.வி. தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிறுபான்மை மக்களுக்கு உற்ற உறவாகவும், அரணாகவும் திகழும் என டி.டி.வி.தினகரன் பேசினார்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கண்கார்டியா பள்ளி மைதானத்தில் நடந்தது.

விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். பின்னர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நமது தேசம் மீண்டு வருகின்ற வேளையில் தமிழகத்தின் கடைக்கோடியில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. இறைவன் மனித குலத்தின் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு ஏசு கிறிஸ்து. கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுதான் நினைவுக்கு வரும்.

இறைவன் உலகுக்கு தந்த அன்பு பரிசு ஏசு. ஏசு அன்பை போதித்தார். 33 ஆண்டு வாழ்ந்து கோடிக்கணக்கான மக்களை ஆட்கொண்டார். தேவனுடைய சொந்த குமாரனாக இருந்தும் தன்னை தாழ்த்திக்கொண்டார் என்று வேதத்தில் கூறப்படுகிறது. ஏசுவின் மலை பிரசங்கம் மிகவும் சிறப்பானது.

ஏசு கோபப்பட்ட இடம் என்று பைபிளில் ஒரே ஒரு சம்பவம் வருகிறது. என் பிதாவின் வீட்டை திருடர்களின் குகை ஆக்கிவிட்டார்களே என்று அவர்களை சாட்டை எடுத்து விரட்டிய சம்பவம் கூறப்பட்டுள்ளது. நோக்கம் சிதைக்கப்படும்போது அன்பின் வடிவமான ஏசுநாதரே கோபப்பட்டார் என வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

புரட்சி தலைவர் கண்ணதாசன் எழுதிய ஏசுகாவியத்தின் முதல் பிரதியை பெற்றுக்கோண்டார். கிறிஸ்தவ மக்களுக்கு காவலராக ஜெயலலிதா திகழ்ந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலாளர் ஆக உள்ள எனக்காக ஜெபிக்கும் நல்ல உள்ளங்களை நான் பெற்றது பாக்கியம்.

மதத்தின் பலம் அதை பின்பற்றும் மக்களால் அறியப்படும். ஏற்றத்தாழ்வுகளால் பிளவுபட்ட கல்வியை மேடு பள்ளம் இல்லாமல் கொண்டு வந்தது கிறிஸ்தவ மி‌ஷனரிகள். தாழ்த்தப்பட்டவர்கள், முதியவர்களை அள்ளி அணைத்து ஆதரவு அளிப்பவர்கள் கிறிஸ்தவ மி‌ஷனரிகள். தன் சொத்துக்களை விற்று முல்லைப்பெரியாறு கட்டிய பென்னிகுயிக்கை மறக்க முடியுமா.

குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய மார்‌ஷல் நேசமணி போன்றவர்கள் நமக்கு சேவை செய்துள்ளனர்.

சோதனையில் சோர்ந்து போனவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளிக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முன்னால் வந்து நிற்கும்.

சிறுபான்மை மக்களுக்கு உற்ற உறவாகவும், அரணாகவும் திகழும்.

பிறக்கும் புத்தாண்டு நல்ல வளத்தையும், நன்மையையும் அளிக்கட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com