மத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் பலி

மத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஜி.டி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). டிராக்டர் டிரைவர். கருங்காலிப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (55). விவசாயி. இவர் தனது நிலத்தை உழவு செய்ய சுப்பிரமணியை அழைத்து இருந்தார். இதையடுத்து அவர் டிராக்டரில் முருகேசன் நிலத்தில் உழவு செய்ய நேற்று சென்றார். உடன் உறவினரான வளர்மதி என்பவரின் மகன் தேவா (12) என்ற சிறுவனையும் அவர் அழைத்து சென்றார்.

நிலத்தில் வரப்பு மீது சென்ற போது திடீரென டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுப்பிரமணியம், தேவா ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் தேவா திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சுப்பிரமணி மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்பிரணி, சிறுவன் தேவா ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com