புரெவி புயல் சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம்- தமிழக அரசு அறிவிப்பு

‘புரெவி’ புயல் பாதிப்புகளை பார்வையிட 28-ந்தேதி மத்திய குழு வருகை தர இருக்கிறது. சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் விரைவாக நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த நவம்பர் மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் ‘நிவர்’ புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக, தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில், 41 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நெற்பயிர், வாழை, தென்னை மற்றும் பல்வேறு பயிர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. இப்புயலினால் ஏற்பட்ட பயிர் சேத கணக்கெடுப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கும்போதே, டிசம்பர் 3-ந்தேதி முதல் ‘புரெவி’ புயல் தாக்கத்தினால், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது.

அதனால், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிரும் மற்றும் இதர வேளாண் பயிர்களும், வாழை, வெங்காயம், மிளகாய் போன்ற தோட்டக் கலை பயிர்களும் ஏறத்தாழ 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டன. கடந்த 8 மற்றும் 9-ந்தேதிகளில், கடலூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களின் கணக்கெடுப்பு பணியினை விரைந்து மேற்கொள்ளுமாறு களஅலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து, விவசாயிகள் வாரியாக வயலாய்வு பணிமேற்கொண்டு, 33 சதவீதத்துக்கு மேல் சேதமடைந்த பயிர்கள் மற்றும் விவசாயிகளின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர், பட்டா, சர்வே எண், வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் விவரங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நெற்பயிர்களை பொறுத்தவரையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல்களில் வெள்ளநீர் முழுமையாக வடிந்த பிறகு, பயிர் சேத விவரங்களை முழுமையாக கணக் கிட்டு, சரிபார்க்க அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பயிர் சேத விவரங்களுடன் அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் விரைவாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவரங்கள் வங்கி கணக்குகளுடன் ஒத்திசைவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும், ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்ததுபோல், ‘புரெவி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகிற 28-ந்தேதி வருகை தரவுள்ளது. இந்த ஆய்வு முடிந்தபின், மத்திய குழுவின் அறிவுரைப்படி, புள்ளிவிவரங்கள் இறுதி செய்யப்பட உள்ளது.

பாதிப்படைந்த விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்தபின், பயிர் சேதவிவரங்கள் குறித்த முழுமையான அறிக்கை அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் விரைவாக அரசால் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com