3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு- கைதான 3 பேரும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டனர்

சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான 3 பேரும் சென்னை கொண்டு வரப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைப்பு
சிறையில் அடைப்பு
Published on

சென்னை:

சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 11-ந் தேதி அன்று பட்டப்பகலில் நிதி நிறுவன அதிபர் தலில்சந்த் (வயது 74), அவரது மனைவி புஷ்பாபாய், மகன் ஷீத்தல் குமார் ஆகியோர் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். தலில்சந்தின் காது வழியாக குண்டு பாய்ந்திருந்தது. மற்ற இருவரின் நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்தன.

இந்த கொடூர கொலை சம்பவம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டது. குருவி, காக்காவை சுட்டு தள்ளுவது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை நொடிப்பொழுதில் சுட்டு தள்ளி விட்டு கொலையாளிகள் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் உடனடியாக கண்டுபிடித்து விட்டனர். கொலை செய்யப்பட்ட ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா அவரைவிட்டு பிரிந்து, புனேவில் அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்தார். 2 குழந்தைகள் அவர்களுக்கு உள்ளனர். ஷீத்தல் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரும், அவரது பெற்றோர் தலில்சந்த், புஷ்பாபாய் ஆகியோர் செய்த கொடுமை காரணமாகவே ஜெயமாலா ஷீத்தலை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. மேலும் வாழ்வாதாரத்திற்காக ஜெயமாலாவுக்கு ரூ.4 கோடியும், சொத்தில் பங்கும் கேட்கப்பட்டது. அதற்கு ஷீத்தலின் தந்தை தலில்சந்த் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஜெயமாலா தனது தம்பிகள் கைலாஷ், விலாஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் 3 பேருடன் சென்னை வந்து, மேற்கண்ட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டு தீர்த்து கட்டி விட்டு தப்பிச் சென்று விட்டார்.

ஜெயமாலா தனது ஒரு தம்பி விலாஷ் மற்றும் ஒரு நண்பருடன் கார் ஒன்றில் தப்பிச் சென்றார். ஜெயமாலாவின் இன்னொரு தம்பி கைலாஷ் தனது நண்பர்கள் ரவீந்திரநாத்கர், விஜய்உத்தம் ஆகியோருடன் மற்றொரு காரில் தப்பி ஓடிவிட்டார். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் மகேஷ்வரன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படையினர் இந்த வழக்கில் விசாரணை நடத்தினார்கள்.

இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான தனிப்படையினர் சென்னையில் இருந்து விமானத்தில் புனே சென்று, கைலாஷ், அவரது நண்பர்கள் ரவீந்திரநாத்கர், விஜய்உத்தம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் 3 பேரை கொல்வதற்கு பயன்படுத்திய பாயிண்ட் 32 ரிவால்வர் ரக துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான கைலாஷ் உள்பட 3 பேரும் நேற்று முன்தினம் புனேவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் யானைகவுனி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. நேற்று அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். வரும் 27-ந் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

போலீஸ் கையில் சிக்காமல் தப்பிச்சென்ற ஜெயமாலா, அவரது தம்பி விலாஷ் உள்பட 3 பேரையும் பிடிக்க உதவி கமிஷனர் ஜூலியர்சீசர் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து மராட்டிய மாநிலம் புனேயில் முகாமிட்டுள்ளனர்.

கைதான கைலாஷ், தனது அக்காள் ஜெயமாலா முன்னிலையில் தான் வைத்திருந்த ரிவால்வர் ரக கைத்துப்பாக்கியால் 5 ரவுண்டுகள் சுட்டு 3 பேரையும் தீர்த்துக்கட்டியவர். அந்த துப்பாக்கியை உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரிதான் தனக்கு கொடுத்தார் என்று கைலாஷ் போலீசாரிடம் கூறி உள்ளார். தன்னுடைய பாதுகாப்புக்காக அந்த துப்பாக்கியை தான் வாங்கி வைத்திருந்ததாகவும் கைலாஷ் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட முன்னாள் ராணுவ அதிகாரி தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கிறார். துப்பாக்கி விஷயமாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் கொலையாளி கைலாஷ் பயன்படுத்திய காரையும் குறிப்பிட்ட முன்னாள் ராணுவ அதிகாரிதான் கொடுத்துள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். இந்த வழக்கில் தோண்ட, தோண்ட தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com