சென்னையில் கனமழையால் பழுதடைந்த சாலைகள்

சென்னையில் பெய்த தொடர் கனமழையால் சாலைகள் பழுதடைந்துள்ளன. இவற்றை செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையின் காரணமாக  சாலை அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து இருக்கும் காட்சி.
கனமழையின் காரணமாக சாலை அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து இருக்கும் காட்சி.
Published on

சென்னை:

‘நிவர்’ புயல் மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகள் தோறும் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அவை குட்டி தீவுகள் போலவே காட்சி அளித்தன. அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.

சாலைகளில் தேங்கிய மழை வெள்ளத்தால், கோயம்பேடு மாநகர பஸ் நிலையத்தின் முன்பகுதி, மதுரவாயல் மேட்டுக்குப்பம் பிரதான சாலை, புழல்-பெருங்களத்தூர் பைபாஸ் சாலை, மாதவரம்-எண்ணூர் பைபாஸ் சாலை, மாதவரம்-வடபெரும்பாக்கம் நெடுஞ்சாலை, ரெட்டேரி-காவாங்கரை செல்லும் சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை 3-வது பிரதான சாலை, அம்பத்தூர் ஓ.டி.பஸ்நிலையம் வரையிலான சாலை, அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, 100 அடி சாலை என சென்னையின் பெரும்பாலான சாலைகள் அனைத்திலும் குண்டும், குழிகளும் ஏற்பட்டு உள்ளன.

இதனால், அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மழை வெள்ளத்தால் சிதலமான சாலைகளை விரைவில் செப்பனிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அதே நேரத்தில், சென்னையில் கனமழை நின்று சில நாட்கள் ஆன போதும், இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி காணப்படுகிறது. மாதவரம்-வடபெரும்பாக்கம் சாலையில் ஆண்டாள் நகர் பகுதியில் சாலையில் சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு முட்டளவு ஆழத்திற்கு மழைநீர் இன்னும் தேங்கி நிற்கிறது. இதே போன்று வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள சில கிராமங்கள் இன்னும் மழை வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும், ரெட்டேரியை ஒட்டி அமைந்துள்ள மாதவரம் செக்ரெட்டேரியட் காலனி பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இங்கு மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு தேங்கிய நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com