

சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்குவது தொடர்பான அறிவிப்பை கடந்த 3-ந்தேதி வெளியிட்டார். அப்போது புதிய கட்சியை தொடங்குவது பற்றி வருகிற 31-ந் தேதி அறிவிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக ‘அண்ணாத்த’ படத்தை முடித்து கொடுக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் கூறி இருந்தார். இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்புக்கு ரஜினி புறப்பட்டு சென்றார். அங்கு கடந்த சில நாட்களாக தங்கி இருந்த ரஜினி தினமும் 9 மணி நேரம் வரையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு அரசியலில் தீவிரம் காட்ட ரஜினிகாந்த் திட்டமிட்டு இருந்தார். வருகிற 29-ந் தேதி சென்னை திரும்பி 31-ந் தேதி புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவும் அவர் முடிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரஜினிகாந்துக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ரஜினிகாந்த் உடனடியாக சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஐதராபாத்திலேயே ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
டாக்டர்களின் ஆலோசனைப்படி ஐதராபாத்திலேயே இருக்கும் ரஜினிகாந்த் 3 நாளில் சென்னை திரும்ப உள்ளார்.
இதனை ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா உறுதி செய்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற போதிலும், படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டதால், ரஜினியின் அரசியல் பயணத்தில் தடை ஏற்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி வருகிற 31-ந் தேதி ரஜினிகாந்த், புதிய கட்சியை தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. வருகிற 27 அல்லது 28-ந் தேதி ரஜினி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி விட்டு எளிமையான முறையில் கட்சியின் பெயரை ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வைத்து இந்த அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று மக்கள் மன்றத்தினர் கூறினார்கள்.