வேலூர் ஜெயிலில் கைதி திடீர் மரணம்

ஆட்டோ திருடிய வழக்கில் கைதாகி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்ட சென்னையை சேர்ந்த வாலிபர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

வேலூர்:

வேலூரில் வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்கள் திருடப்பட்டு வந்தன. இது சம்பந்தமாக வேலூர் வடக்கு தெற்கு சத்துவாச்சாரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆட்டோ திருட்டு கொள்ளை நடந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஆட்டோவை திருடி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பழைய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது44) எனவும், வேலூரில் ஆட்டோக்களை திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர். குடியாத்தத்தில் இருந்து நேற்று முன்தினம் வேலூர் ஆண்கள் ஜெயிலில் ரமேஷை அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு ரமேஷுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறைத்துறையினர் ரமேசை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பாகாயம் போலீசில் சிறை துறை சார்பில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com