சஞ்சு சாம்சன் சதம் வீணானது - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி சதமடித்தும் இறுதியில், பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
சதமடித்த சஞ்சு சாம்சன்
சதமடித்த சஞ்சு சாம்சன்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 4-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

மயங்க் அகர்வால் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த தீபக் ஹூடா ருத்ர தாண்டவம் ஆட 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்தது. 

பொறுப்புடன் ஆடிய கேஎல் ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 91 ரன்கள் விளாசினார்.

இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. பென் ஸ்டோக்சும், மனன் வோராவும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

முதல் ஓவரின் 3வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டானார். மனன் வோரா 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் ஆடினார். ஜோஸ் பட்லர், ஷிவம் டூபே ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தனர். பட்லர் 25 ரன்னிலும், ஷிவம் டூபே 23 ரன்னிலும் வெளியேறினர். ரியான் பராக் 11 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் தனியாளாக போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றார். கடைசி ஓவரில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுக்க திணறியது. 

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் 119 ரன்னில் கடைசி பந்தில் அவுட்டானதால் அந்த அணியின் வெற்றி பறிபோனது. இதனால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com