

சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகுந்த காலதாமதமான அறிவிப்பு. அரசியல் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப்பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுத்து ஒவ்வொரு நாளும் நெருக்கடியை உருவாக்கி அம்மாநில மக்களுக்கான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விடாமல் முடக்கி வைத்தவர் துணைநிலை ஆளுநர்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக, போட்டி முதல்-அமைச்சராகச் செயல்பட அனுமதித்து, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக முடக்கி முறித்துப்போட்ட பா.ஜ.க. அரசு, தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண் துடைப்பு கபட நாடகம்.
புதுச்சேரி மக்களை ஏமாற்ற கடைசி நேர நடவடிக்கை, இறுதி கட்ட முயற்சி. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை வைத்து பா.ஜ.க. செய்த தரம் தாழ்ந்த அரசியலையும் அம்மாநிலத்தின் முன்னேற்றத்தை பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் புதுச்சேரி மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.