

திண்டிவனம்:
திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர்நகர் மற்றும் பட்டணம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி கூட்டுறவு துறை சார்பில் ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை ஆகியன குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு நகர செயலாளரும், திண்டிவனம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவருமான வக்கீல் தீனதயாளன் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பொறுப்பு சரஸ்வதி, திண்டிவனம் சப்-கலெக்டர் அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபாகரன் வரவேற்றார்.
இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2500 ரொக்கத்தை வழங்கி, தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி திண்டிவனம் அடுத்த திருவள்ளுவர் நகர், பட்டணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மணிமாறன், திண்டிவனம் துணைப்பதிவாளர் குருசாமி, விழுப்புரம் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ரகுராமன், தகவல் தொழில்நுட்பபிரிவுமாவட்ட செயலாளர் முகமது ஷெரீப், சங்க மேலாண்மை இயக்குனர் வீர செல்வம், சங்க இயக்குனர்கள் காளிதாஸ், லீமா ஜாக்குலின், சந்திரசேகர், உப்பு ராமதாஸ் , முருகன், வெங்கடாசலம் மற்றும் தளபதி ரவி, அர்பன் வங்கி தலைவர் சேகர் , மணிமாறன் பிரகாஷ், கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.