தமிழ்நாடு, புதுச்சேரியில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி- மாயாவதி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 4 மாநில சட்டசபை தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக மாயாவதி அறிவித்துள்ளார்.
மாயாவதி
மாயாவதி
Published on

லக்னோ:

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமின் 87-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது புகைப்படத்துக்கு கட்சி தலைவர் மாயாவதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கடந்த 14 மாதங்களில் அவர் பேட்டி அளிப்பது இதுவே முதல்முறை ஆகும். பேட்டியில் அவர் கூறியதாவது:-

5 மாநில சட்டசபை தேர்தலில், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும். இதுதொடர்பாக உள்கட்சி மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. எங்கள் வியூகத்தை வெளியே சொல்ல மாட்டோம்.

கடந்த காலங்களில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது எங்களுக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது. அதாவது, தேர்தலில், எங்கள் கட்சியின் ஆதரவு ஓட்டுகள், மற்ற கட்சிகளுக்கு செல்லும்.

ஆனால், பிற கட்சிகளின் ஓட்டுகள் எங்கள் கட்சிக்கு வராது. எனவேதான் தனித்து போட்டியிடுகிறோம்

அடுத்த ஆண்டு நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம். மொத்தம் உள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிட்டு நல்ல வெற்றியை பெறுவோம்.

அதுபோல், விரைவில் நடக்க உள்ள உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல்களிலும் நல்ல வெற்றியை பெறுவோம். எதிர்காலத்திலும் கூட்டணி அமைக்காமல்தான் போட்டியிடுவோம்.

இவ்வாறு மாயாவதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com